கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2018 ஆண்டின் ஏஎப்எப் சுசூகி கிண்ணத்திற்கான (AFF Suzuki Cup Championship) காற்பந்து போட்டியின் முதலாவது இறுதிச் சுற்று ஆட்டத்தில், மலேசியாவும், வியட்நாமும் தலா இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டன.
நேற்று இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், மலேசியாவின் ஷாருல் சாட் சொந்த கோலைப் புகுத்தி மலேசிய இரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து வியட்னாமின் பாம் டுக் ஹூய் மற்றொரு கோலைப் புகுத்தி வியட்னாமை 2-0 என்ற நிலையில் முன்னணிக்குக் கொண்டு வந்தார்.
எனினும், மலேசிய இரசிகர்களின் ஆதரவுக் குரல்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடுமையான போராட்டம் நடத்திய மலேசிய விளையாட்டாளர்கள் 36-வது நிமிடத்தில் ஷாருல் சாட் அடித்த கோலினால் ஆட்டத்தை 2-1 என்ற நிலைக்குக் கொண்டு வந்தனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் மலேசியாவின் சஃபாவி ரஷிட் மற்றொரு கோலைப் புகுத்தி ஆட்டத்தை 2-2 என சமநிலைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு குழுக்களுமே மற்றொரு கோல் போட கடுமையாக முயற்சி செய்தும், ஆட்டம் 2-2 என்ற நிலையிலேயே முடிவுற்றது.
இறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டம் ஹானோயில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும்.