பெட்டாலிங் ஜெயா: மூத்த அம்னோ தலைவர்கள் சிலர், பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டது, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பலருக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நேற்று சபாவில் அம்னோ தலைவர்கள் அதிகமான அளவில் கட்சியை விட்டு வெளியேறியச் செயலின் வெளிப்பாடாக இது இருக்கலாம் எனும் ஊகமாகவே இக்கேள்விகள் எழுந்தன.
அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான், டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் மன்சோர், டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின், டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் மற்றும் டத்தோஶ்ரீ நோ ஒமார் ஆகியோர் பிரதமருடன் அப்படத்தில் இருந்தனர்.
இது தொடர்பாக, கருத்துரைத்த அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் பிரதமரைச் சந்தித்தது உண்மைதான் என உறுதிப்படுத்தினார். ஆனால், அச்சந்திப்பு, அம்னோவிலிருந்து தாவும் நோக்கத்தைக் கொண்டது அல்ல என அவர் குறிப்பிட்டார்.
மாறாக, இதற்கு முன்னர் பிரதமர் நியூயார்க்கில் இருந்த போது, அம்னோவை “புதைத்துவிடலாம்” என்று கூறி அச்சுறுத்தியதன் காரணமாகத்தான் சந்தித்தோம் எனத் தெளிவுப்படுத்தினார். அவ்வாறு ஏதேனும் செய்து விட வேண்டாமென்றும் பிரதமரைக் கேட்டுக் கொண்டதாக ஹாசான் கூறினார்.