Home கலை உலகம் மலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்

மலேசியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கொடிக் கட்டிப் பறக்கும் இயக்குனர் – ஜேம்ஸ் வான்

1271
0
SHARE
Ad

மணிலா: நம்மில் எத்தனை பேர் நம்முடனே பல திறமைகளோடு இயங்கும் பிள்ளைகளை, நண்பர்களை, சொந்தங்களை, பாராட்டியிருப்போம்? அவர்களது திறமைகள் வெளிப்படும் போதுதான் தேவையற்ற கருத்துகளைத் திணித்து அவர்களின் கனவுகளை சிதைத்து விடுவோம்.

ஹாலிவுட்டில் சிறப்புமிக்க திரைப்படங்களை வழங்கிக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் வான் என்பவர் நம் மலேசிய மண்ணைச் சார்ந்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாகவே ஆங்கிலப் படங்கள், அதுவும் ஹாலிவுட் படங்கள் என்றாலே எல்லாப் பிரிவுகளும் வெள்ளையர்களை முதன்மையாகக் கொண்டே நகர்த்தப்பட்டிருக்கும்.

#TamilSchoolmychoice

ஜேம்ஸ் வான், சரவாக்கில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளந்தவர். தற்போது 41 வயதை எட்டியிருக்கும் இவர், ஹாலிவுட்டில் பெயர் சொல்லக் கூடிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பதே உண்மை.     

2003-ல் தனது திரைப்பட அனுபவத்தை குறைந்த செலவிலான படங்களை இயக்குவதிலிருந்து தொடங்கினார். சோ (SAW) எனப்படும் திகில் நிறைந்தப் படத்தினை இயக்கிப் பெயர் சொல்லும் அளவிற்கு உயர்ந்தார். நம்மில் பலர் இன்சீடியஸ் (Insidious) மற்றும் தி கொஞ்சுரிங் (The conjuring) படங்களைத் திரையரங்குகளில் சென்றுப் பார்த்திருப்போம். பலர் இத்திரைப்படங்களைப் பார்த்து பயந்து, மருத்துவமணை செல்லும் அளவிற்கு இதன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இத்திரைப்படங்களை இவ்வளவு நேர்த்தியாக இயக்கி, திகில் உலகிற்கே மற்றொரு வடிவத்தைக் கொடுத்தவர் ஜேம்ஸ் வான் என்றால் அது மிகையில்லை.

சமீபத்தில் வெளியான தி நன் (The Nun) எனும் திரைப்படத்தில் இவரது முந்தைய படங்களில் வருகிற கன்னியாஸ்திரி பாத்திரத்தையே அதன் இயக்குனர், கோரின் ஹார்டி முதன்மையாகக் கொண்டு இயக்கியிருப்பார்.

ஹாலிவுட்டில் ஆசிய பிரதிநிதித்துவம் இல்லாததைப் பற்றி கருத்துரைக்கையில், “இந்த போக்கு மாற்றப்பட வேண்டும், அனைத்து கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து வெவ்வேறு பரிமாணங்களில் இயங்குவதற்கு நாமே வழிவகுத்துக் கொள்ள வேண்டும்” என்று வான் கூறினார்.

“குங் பூ திரைப்படங்களை தயாரிப்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. நான் திகில் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். தற்போது அதில் முக்கிய இடமும் பெற்றுள்ளேன் என நம்புகிறேன். ஹாலிவுட்டில் வெற்றிகரமான திகில் படங்கள் எடுக்கும் ஆசிய இயக்குநர்களை காண இயலாது. நான் ஒரே மாதிரியான படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை,” என்று அவர் தொடர்ந்தார்.

தற்போது, அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அகுவாமேன் (Aquaman) திரைப்படம் தமக்கு வேறு ஒரு அடையாளத்தை தந்துள்ளது என வான் கூறினார்.  சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலரில் இப்படம் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே பெரிய அளவிலான திரைப்படங்களை இயக்கும் போது, அதற்குண்டான அழுத்தமானது வேறு. அனைவரும் பார்த்து இரசிக்கக் கூடிய அளவிற்கு நமது எண்ணங்கள் இயங்க வேண்டியிருக்கும். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டிசி சினெமெடிக் யுனிவேர்ஸ் (DC Cinematic Universe) இத்திரைப்படத்தினைத் தயாரித்துள்ளனர். இதன் மூலமாக தாம் புதிய உலகிற்குள் நுழைந்திருப்பதாக வான் குறிப்பிட்டார்.