Home இந்தியா தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய் நிர்ணயித்த பஞ்சாப் அணி!

தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்திக்கு 8.4 கோடி ரூபாய் நிர்ணயித்த பஞ்சாப் அணி!

969
0
SHARE
Ad

புதுடில்லி – 2013-ம் ஆண்டு முதல் மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டில் ஈடுபட்டு வரும் வருண் சக்கரவர்த்தி, சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் கட்டிட வடிவமைப்பாளராகத் தனது படிப்பினை முடித்து, இரண்டு ஆண்டுகள் அத்துறையிலேயே வேலைச் செய்து வந்தார். பின்பு, கிரிக்கெட் மீதான ஆர்வத்தினால் மீண்டும் அவ்விளையாட்டில் நாட்டம் செலுத்தினார்.

தற்போது, டி.என்.பி.எல் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வருண், ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 12-வது பருவத்திற்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.

இந்த ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, அவரை தங்கள் வசம் வைத்துக் கொண்டது கிங்ஸ் லெவன் எனும் பஞ்சாப் அணி.  முன்னதாக, தமிழக வீரரான வருணுக்கு 20 லட்சம் என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இவரது பெயர் அறிவிக்கப்பட்டதும், சென்னை அணியும்,  டெல்லி அணியும், போட்டிப் போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டின. வருண் சக்கரவர்த்திக்கான விலையை சென்னை அணி 3 கோடி ரூபாய் வரை கொண்டு செல்ல, டெல்லி அணி 3.4 கோடி ரூபாய் வரை உயர்த்தியது. மொத்த தொகையாக 8.4 ரூபாய் கோடியில் மோஹித் ஷர்மாவை ஏலத்துக்கு எடுத்து விட்டதால், சென்னை அணி வருணைப் பெறுவதிலிருந்து விலகியது.

இறுதியில், டெல்லி அணியும் , பஞ்சாப் அணியும் போட்டிப் போட்டு, 8.4 கோடி ரூபாயில் பஞ்சாப் அணி வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுத்தது.