சிப்பாங்: 73,000 வெளிநாட்டு தனிநபர்களை நாட்டின் உள்ளே நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), இவ்விவகாரம் குறித்த அறிவிப்புகள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.
“நாட்டில் பெயரிடப்படாத அல்லது தற்போது செயலில் இல்லாத கல்வி நிலையங்களின் பெயர்களை பயன்படுத்திப் படிக்க வந்ததாகக் கூறிக்கொண்டு நாட்டினுள் நுழைந்தவர்களை நாங்கள் கைது செய்து விட்டோம்”, என முஸ்தாபார் கூறினார்.
மலேசியாவிற்கு உண்மையான நோக்கத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு வருகிற வெளிநாட்டவர்களை எப்போதும் மலேசியா வரவேற்கும் என அவர் மேலும் கூறினார்.
மொத்தம் 185,065 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களில் 46,630 பேர்கள் சட்டவிரோதமாக நாட்டினுள் குடியேறியக் காரணத்தினால், மீண்டும் அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர் என முஸ்தாபார் கூறினார்.
தற்போது, 9,000 சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்துள்ளதாகவும், போதுமான இடம் மற்றும் தேவையற்ற செலவுகளை கருத்தில் கொண்டு, அவர்களைக் கூடிய விரையில் அவர்களது சொந்த நாட்டிற்கே அனுப்பத் திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் கூறினார்.