கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது. வெளிநபர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 15 தீயணைப்பு வீரர்களுடன், மூன்று தீயணைப்பு வண்டிகள், பகல் 2:37 மணி அளவில் செய்திப் பெறப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் நோரிசாம் முகமட் நுடின் தெரிவித்தார்.
தீக்கான காரணம் இன்னமும் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என அவர் பெர்னமாவிடம் கூறினார்.
இதற்கிடையில், சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரி புத்ராஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கடமையில் இருந்ததாகவும், அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அந்நேரத்தில் வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஒட்டி புகார் பெறப்பட்டதாக சிப்பாங் காவல் துறைத் தலைவர் அப்துல் அசிஸ் அலி உறுதிப்படுத்தினார்.