அமெரிக்கா: சமீபக் காலத்தில் அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பொட்டலங்கள் (பார்சல்) திருடுப் போவதாகப் பல புகார்கள் எழுந்தன. இணையம் வழி பொருட்களை வாங்குவோரின் வீட்டு முன் அப்பொருட்கள் வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால், சமீபத்தில் பெரும்பாலான பொட்டலங்கள் காணாமல் போவது குறித்து காவல் துறையில் புகார் செய்யப்பட்டன.
இம்மாதிரியான, அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பொட்டலங்களை திருடுபவர்களை கண்டறிய காவல்துறையுடன் இணைந்து புதிய முயற்சியை அமேசோன் நிறுவனம் கையாண்டுள்ளது.
அதன்படி, நியூ ஜெர்சி மாகாணத்தில் அதிகாரிகள் போலி பொட்டலங்களை, அதாவது அப்பொட்டலங்களுக்குள் ஜிபிஎஸ் எனப்படும் திசைக்காட்டும் கருவியை பொதித்து வைத்து வீடுகளுக்கு வெளியே வைத்துவிடுவர். கதவுக்கருகில் இரகசிய கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வாறான செயல் முறை நல்லதொரு பயனை அளித்துள்ளதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.
வருகிற, கிரீஸ்துமஸ் விழா காலத்தில், 900 மில்லியன் பொட்டலங்கள் அமெரிக்க தபால் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் அமேசோன் நிறுவனம் அமேசோன் கீ எனும் சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொட்டலங்கள் விநியோகம் செய்பவர்கள் ஒரு செயலியின் உதவியோடு கதவைத் திறந்து வீட்டுக்குள் பொட்டலத்தை வைத்துவிடலாம்.