ஹாங்காங்: திரைப்பட தொழில்நுட்ப நிறுவனம் சி.ஜெ. 4டி ப்லேக்ஸ் (CJ 4DPLEX) மற்றும் மலேசியத் திரையரங்கு நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (GSC) மலேசியாவில் முதல் மூன்று ஸ்க்ரின் எக்ஸ் (ScreenX) திரையரங்குகளையும், கூடுதல் மூன்று 4DX திரையரங்குகளையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
ஸ்கிரீன் எக்ஸ் என்பது, திரைப்படத்தை அகண்ட மூன்று திரைகளில், அதாவது நம்மைச் சுற்றியும் திரையானது 270° பாகை (டிகிரி) சூழ்ந்திருக்கும் வகையில் அமைந்திருக்கும். திரையிடப்படும் படத்தினுள்ளே நாம் இருப்பது போன்ற ஓர் உணர்வை இது ஏற்படுத்தக் கூடியதாகும்.
அடுத்த ஆண்டு ஓன் உதாமா பேரங்காடியில், இந்த அமைப்பு முறையானது தொடங்கும் எனவும், இதர இரண்டு கூடுதல் திரையரங்குகளும் 2020-ஆம் ஆண்டில் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“மலேசியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் மெருகூட்டல் அனுபவங்களை வழங்குவதற்கான ஓர் அர்ப்பணிப்புடன் மலேசியாவில் இயங்கி வரும் முன்னணி திரைப்பட நிறுவனத்துடன், நாங்கள் கைகோர்ப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்” என்று சி.ஜெ.4டி ப்லேக்ஸ் தலைமை நிருவாக அதிகாரி கிம் ஜோங் ரியுல் தெரிவித்தார்.
“மலேசியாவின் முதல் 4DX அரங்கினை அறிமுகப்படுத்திய பின்னர், மீண்டும் புதியதொரு அம்சத்தை, அதாவது அகண்ட மூன்று திரைகளில் படத்தினை காணும் வாய்ப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் தலைமை நிருவாக அதிகாரி கோ மெய் லீ கூறினார்.
இன்றைய தேதி வரையிலும், உலகளாவிய அளவில் சுமார் 589 அரங்குகள், 61 நாடுகளில் 4டிஎக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.