கோலாலம்பூர்: அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் போட்டியிட முடியாது என ஜசெக கட்சி வழக்கறிஞரும் ஜெலுத்தோங் (பினாங்கு) நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என். ராயர் கூறியதற்கு, வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்கவிருப்பதாக மஇகா கட்சியின் உதவித் தலைவர் சி. சிவராஜ் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, தாம் நாடாளுமன்ற மக்களவையில் அமர முடியாது என ராயர் தவறாகக் கூறியதை சிவராஜ் சுட்டிக்காட்டினார்.
“ராயர் சட்டத்தை நன்கு தெரிந்திருக்க வேண்டும். சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, மக்களவை சபாநாயகரைத் தூண்டிவிட்டு என்னை நாடாளுமன்றத்தில் இருக்க விடாமல் செய்தது தவறு”, என அவர் பிரி மலேசிய டுடே இணைய ஊடகத்திடம் கூறினார். சட்டம் குறித்த அவரது ஆழமற்ற புரிதலால் தேவையற்ற குழப்பங்களை ராயர் ஏற்படுத்தி விடுகிறார் எனவும் சிவராஜ் தெரிவித்தார்.
1954-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையச் சட்டத்தை மீறியதற்காக, கடந்த 9-ம் தேதி நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்தப் பிறகு, சிவராஜ் வருகிற இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது என ராயர் குறிப்பிட்டிருந்தார்.