கோலாலம்பூர் – “நாட்டில் இனங்களுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக இனவாதமும் பொறுப்பற்ற தன்மையும் எழுவதைக் கண்டு ஹிண்ட்ராஃப் மிகவும் அதிர்ச்சி அடைகிறது. முகமட் அடிப்பின் துயரமான முடிவின் தொடர்பாக ஒரு சில தரப்பினர் இன-மத அரசியல் நெருப்பை மூட்டி அதில் நெய்யையும் ஊற்றுகின்றனர். சக மலேசியர் ஒருவர் மறைந்துவிட்ட நிலையில் அவருக்காக வருந்துவதை விடுத்து, ஒரு சிலத் தரப்பினர் இதன் தொடர்பில் இன-மத அடிப்படையில் முரண்பாடான கருத்துகளைத் தெரிவிப்பதுடன் அமைச்சரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான பொன்.வேதமூர்த்தியை பலிகடா ஆக்க முயல்கின்றனர்” என்று ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கார்த்தி ஷாண் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆராய்ந்து பாராமல் அல்லது வேண்டுமென்றே இனங்களுக்கு இடையே பேணப்படும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவது குற்றச் செயல் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் பல முறை சொல்லி விட்டனர். இருந்தும் ஒரு சில தரப்பினர், தொடர்ந்து இவ்வாறு செயல்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையை பல இன மலேசிய சமுதாயத்தில் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. அம்னோ காலங்காலமாக கையாளும் இதுபோன்ற உத்திகள், நம்பிக்கைக் கூட்டணி அரசில் களையப்பட வேண்டும்” என்றும் கார்த்தி ஷாண் கூறினார்.
மனித உரிமையின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான பேச்சுரிமையை ஹிண்ட்ராப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, பல இன மக்கள் காலங்காலமாக நிலைநாட்டும் இணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்க முயலும் இதுபோன்ற தரப்பினரின் சிறுமைத்தன முயற்சியை தொடரவிடக் கூடாது என்றும் கார்த்திக் ஷாண் கேட்டுக் கொண்டார்.
“பொது நன்மைக்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நம்பிக்கைக் கூட்டணி அரசும் இதன் தொடர்பில், தொடர்ந்து அமைதி காக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மலேசியக் கூட்டு சமுதாயம் நிலைநாட்டி வரும் நல்லிணக்கம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் கார்த்தி தனது அறிக்கையில் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்த வேளையில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஹிண்ட்ராப் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை, பிரதமர் துன் மகாதீர் தலைமையில் நாடு இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதிலும் ஹிண்ட்ராப் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் கார்த்தி ஷாண் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.