கோலாலம்பூர்: அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குறித்த சந்திப்பு, கூடிய விரைவில் நடத்தப்படும் என அம்னோவின் இடைக்காலத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் கூறினார்.
பொதுவாகவே, தேர்தலுக்கு முன்பதாக தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் தேசிய முன்னணி அங்கத்துவக் கட்சிகள் முறையாக விவாதித்து முடிவுகள் எடுக்கும் என அவர் தெரிவித்தார். அந்த போக்கு இந்த இடைத் தேர்தலிலும் தொடரப்படும் என அவர் குறிப்பிட்டார் .
பாரம்பரியமாக கேமரன் மலை தொகுதி மஇகா கட்சிக்கு சொந்தமானது எனவும், தற்போது அந்த தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது மஇகா தலைமைத்துவத்தின் முடிவாக இருக்கும் என அவர் கூறினார்.
14-வது பொதுத் தேர்தலில், கேமரன் மலையில் தேசிய முன்னணியின் வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. மேலும், தற்போதைய மஇகாவின் உதவித் தலைவர் சி. சிவராஜிக்கே மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.