ரஷ்யா: பூமியின் வட துருவம் அதன் பனிப்பொழிவுக்கு புகழ்பெற்றது. அதுவும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் இந்த வேளையில் பனிப்பொழிவு அதிகமாகவே இருக்கும். ஆயினும், நாம் மட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவில்லை என்பதை நினைவூட்டும் அளவில், செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படமொன்று நிரூபித்து இருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (European Space Agency), மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் எனும் திட்டத்தின் வாயிலாக இப்படம் எடுக்கப்பட்டது.
கொரோலேவ் (Korolev) எனப்படும் பள்ளத்தாக்கு, செவ்வாய் கிரகத்தின் வட துருவத்திற்கு அருகே உள்ளது. இப்பள்ளமானது, 82 கி.மீ (50 மைல்கள்) விட்டத்தைக் கொண்டதோடு, 1.8 கி.மீ வரையிலும் தடித்த பனியால் நிரப்பப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின், விண்கலம் (ராக்கெட்) பொறியியலாளரும், விண்கல வடிவமைப்பாளருமான செர்ஜி கொரோலேவின் பெயர் இந்தப் பகுதிக்கு சூட்டப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், மற்றொரு கிரகத்திற்கு பயணம் செய்யும் முதலாவது முயற்சியாக இந்த மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் அமைகிறது. 2003-ஆம் ஆண்டு, ஜூன் 2-தேதி விண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு, அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் நுழைந்தது.