கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் அறுவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலேசிய இந்தியர் கழகத்தின் தலைவர் மணிமாறன், 38, மற்றும் இதர ஐவர் மீதும் பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன.
இதுவரையிலும், இவ்விவகாரம் குறித்து 24 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிபதி முகமட் இக்வாமன் முகமட் நாசிர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. ஆயினும், மணிமாறனும் இதர ஐவரும் இக்குற்றங்களை ஒப்புக் கொள்ளவில்லை.
மணிமாறன் மீது மூன்று குற்றங்கள் சாட்டப்பட்டன, அதாவது, அரசாங்க ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தது, கலவரத்தில் ஈடுபட்டது, மற்றும் மற்றவர்களுக்கு காயம் ஏற்படக் காரணமாயிருந்தது என மூன்று குற்றங்கள் அவர் மீது சாட்டப்பட்டன. இதர ஐவரும், ஆயுதங்கள் ஏந்தியதற்கான குற்றத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.