மான்செஸ்டர் (இங்கிலாந்து) – வட இங்கிலாந்து நகரான மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா இரயில் நிலையத்தில் மூவர் மீது, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை காவல் துறையினர் பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து அந்த இரயில் நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான மூவரில் ஒருவர் காவல் துறையின் ஆண் அதிகாரியாவார். மேலும் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குவர்.
திங்கட்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.00 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
தாக்குதல் நடத்தியவன் தாக்குதலுக்கு முன்பாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சுலோகங்களை முழங்கினான் எனவும் ஊடகங்கள் தெரிவித்தன.
தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் என நம்பப்படும் ஒருவனைக் கைது செய்துள்ள காவல் துறையினர், மான்செஸ்டரிலுள்ள அவனது இல்லத்தை சோதனையிட்டு, அவனது அடையாளத்தை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.