Home நாடு “இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)

“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி (1)

1637
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டுவரை தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக, அவ்வப்போது, சமூகப் பிரச்சனைகளில், குறிப்பாக இந்தியர் பிரச்சனைகளில், ஆணித்தரமாக தனது கருத்துகளை வலுவுடன் மேடைகளிலும், ஊடகங்களிலும் பதியவைத்துப் பிரபலமானவர் பி.இராமசாமி. 2008 பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக அரசியல் களத்திலும் பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர் பி.இராமசாமியின் போராட்டக் குரல் அப்போது முதல் இப்போது வரை, மலேசிய அரசியல், சமூகப் பிரச்சனைகளில் தொடர்ந்து தயங்காது உரத்து ஒலித்து வருகிறது.

பிரச்சனையை நேரடியாக எதிர்கொண்டு – யாராக இருந்தாலும் – எந்தவித சமரசமும் இல்லாமல் தனது கருத்துகளைச் சொல்பவர் – பதிவுகளில் அவராகவே சொந்தமாக எழுதுபவர் இராமசாமி. 4 இந்திய அமைச்சர்கள் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து வலம் வந்தாலும், மற்ற இந்தியத் தலைவர்கள் பலர் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்தாலும், தனது அனுபவத்தாலும், பரந்த கல்வி அறிவாலும், துணிச்சலுடன் வாதாடும் திறனாலும், இன்றும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒருமுகப்படுத்தப்பட்ட இந்தியத் தலைவராகப் பார்க்கப்படுபவர்.

2019 பிறக்கின்ற தருணத்தில், கடந்த 6 மாத காலமாக நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள், பினாங்கு துணை முதல்வர் பணிகள், இந்திய சமுதாயத்தில் தற்போது எழுந்திருக்கும் சில இந்தியர் விவகாரங்கள், 2019-ஆம் ஆண்டின் எதிர்பார்ப்புகள், எதிர்காலப் பயணங்களின் திசைகள் எப்படி இருக்கும் – என பல அம்சங்கள் குறித்துப் பேச நேரம் கேட்க, உடனடியாக அழைப்பு வந்தது இராமசாமியின் அலுவலகத்தில் இருந்து!

#TamilSchoolmychoice

ஜோர்ஜ் டவுனின் வானை முட்டும் கொம்தார் கட்டடத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில், ஒரு காலைப் பொழுதில் – தமிழர்களில் பெருமை சாற்றும் தஞ்சை பெரிய கோயிலின் கம்பீரமான புகைப்படம் பின்னணியில் தெரிய அமர்ந்திருந்த இராமசாமியுடன், செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய – சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட – சிறப்பு நேர்காணலும், அவர் வழங்கிய பரபரப்பான பதில்களும் இனி….

ஆறுமாத கால நம்பிக்கைக் கூட்டணியின் செயல்பாடுகள் எப்படி?

கேள்வி : 2008 முதல் 2018 வரை பத்தாண்டுகள் பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் ராயாட் கூட்டணி (இப்போது பக்காத்தான் ஹரப்பான் – நம்பிக்கைக் கூட்டணி) ஆண்டாலும், மத்திய அரசாங்கம் தேசிய முன்னணி வசம் இருந்தது. ஓர் எதிர்க்கட்சி மாநிலமாகத்தான் பினாங்கு மாநில ஆட்சி நடந்தது. இப்போது மத்திய அரசாங்கமும் உங்கள் கையில்  இருக்கும்போது, என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்? கடந்த ஆறுமாத காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: பினாங்கு மாநிலத்தில் நாங்கள் முதலமைச்சர் லிம் குவான் எங் தலைமையில் பல திட்டங்களை, மேம்பாடுகளைக் கொண்டுவந்தாலும், பல விவகாரங்களில் எங்களுக்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. அவற்றை சமாளித்தோம். அதனால், எல்லாவற்றையும் யோசித்துத் திட்டமிட்டு செய்ய வேண்டிய நெருக்கடியில் இருந்தோம்.

இப்போது அப்படியில்லை. எதையும் துணிச்சலுடன் நேரடியாக முன்னெடுக்க முடிகிறது. அணுக முடிகிறது. அதிலும் எங்களின் மாநில முதல்வராக இருந்தவரே இப்போது நிதியமைச்சராகவும் இருப்பதால், விளக்கிச் சொல்லாமலே அவருக்குப் பல விஷயங்கள் புரியும். குறிப்பாக கல்வி, சமயம், மேம்பாடுகள் போன்ற விவகாரங்களில் எங்களால் மாநிலத்தில் பல பணிகளைச் செய்ய முடிகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேசிய முன்னணி அரசாங்கம் விட்டுச் சென்றிருக்கும் நிதி நெருக்கடியால், கடன் சுமையால், எங்களால் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. நிலைமைகளைச் சரி செய்து வருகிறோம். பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை எங்கள் பிரச்சனைகளை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சேமிப்பில் நாங்கள் கவனம் செலுத்தியதால், எங்களின் திட்டங்களை முன்னெடுக்க எங்களிடம் போதுமான நிதிவளம் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல்களை, ஒத்துழைப்புகளைப் பெறுவதில் எந்தவித சிக்கல்களும் இல்லை. அதனால் பல விஷயங்களை நாங்கள் திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறோம்.

பினாங்கு மாநிலத்துக்கான 2030 வரையிலான செயல் திட்டம் அதில் ஒன்று.

ஆனால், புதிதாக நம்பிக்கைக் கூட்டணி அமைத்த பேராக், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் நிர்வாக ரீதியாக அவர்களும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதே உண்மை.

பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ…

கேள்வி: பினாங்கு மாநிலத்தின் 2030 எதிர்காலச் செயல் திட்டம் குறித்து…?

பதில்: பல அம்சங்களில் பினாங்கை மலேசியாவின் முன்னணி மாநிலமாக, முதல் நிலை மாநிலமாக முன்னேற்றும் திட்டம் இது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, எல்லா வகையிலும், நிலைகளிலும் மாநிலத்தை பசுமை மயமாக்குவது, மக்களுக்கான வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கச் செய்வது,  முதலீடுகளை மாநிலத்தில் அதிகரிப்பது, மக்களுக்கு வளமான, சுகாதாரமான வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தருவது ஆகியவை எங்களின் பினாங்கு 2030 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

தற்போது 2.5 விழுக்காடாக இருக்கும் வேலைவாய்ப்பின்மையை மேலும் குறைப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் கொண்ட மாணவர்களை மாநிலத்தில் உருவாக்க, அதற்கேற்ற கல்விச் சூழலை ஏற்படுத்தித் தருவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அதன் மூலம், 4.0 தொழில் வளர்ச்சி (Industrial 4.0) என்ற அடுத்த கட்ட வளர்ச்சி சித்தாந்தத்தை நோக்கி மாநிலத்தை முன்னெடுக்கவிருக்கிறோம்.

முன்னாள் முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் வேறுபாடுகள் என்ன?

கேள்வி: முந்தைய முதல்வருக்கும் இன்றைய முதல்வருக்கும் வேறுபாடுகள் ஏதாவது?

பதில்: ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கும். குவான் எங் துடிப்பானவர். எதையும் சுறுசுறுப்பாக, அதிரடியாக தனக்கே உரித்தான பாணியில் செய்யக் கூடியவர்.

அதே சமயம் தற்போதைய முதல்வர் சௌ கோன் இயோவும் எங்களின் கட்சிக்காரர்தான். அதோடு கடந்த காலங்களில் எங்களோடு ஆட்சிக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றியவர். பினாங்கு மாநிலப் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவர் வேறுவிதமான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறார். எனினும், அவருடன் பணியாற்றுவதில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் நல்ல புரிதலும், பணிகளை ஆற்றுவதில் சிறந்த நட்புறவும் இருக்கிறது.

அடுத்து:

  • 14-வது பொதுத் தேர்தலின்போது, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, இந்திய வாக்குகளை ஈர்த்த ஒரு முக்கிய அம்சம் தமிழ் இடைநிலைப் பள்ளி. இந்தப் பொதுத் தேர்தல் வாக்குறுதி இப்போது என்ன நிலைமையில் இருக்கிறது?
  • இந்து அறவாரியம் தொடர்ந்து தேசிய நிலையில் அமைக்கப்படுமா?
  • நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியத் தலைவர் என்ற ஒருவர் தேவையா?

இராமசாமியில் பதில்கள்?…..தொடர்கின்றன!

-நேர்காணல்: இரா.முத்தரசன்

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் நேர்காணலின் காணொளி வடிவத்தை யூடியூப் தளத்தின் ‘செல்லியல் அலை’ என்னும் கீழ்க்காணும் இணைப்பின் வழி காணலாம்: