Home இந்தியா திருவாரூர் : திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்

திருவாரூர் : திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்

1060
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் (படம்) போட்டியிடுவார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் செயலாற்றி வருகிறார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து காலியான இந்தத் தொகுதியில் ஸ்டாலின் குடும்பத்தினர் போட்டியிடுவார்கள் என முதலில் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், எதிர்பாராத தோல்வி ஏற்பட்டால் அதனால் கட்சிக்கும் ஸ்டாலினுக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் உள்ளூர் வேட்பாளர் ஒருவரையே களமிறக்க திமுக முடிவு செய்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அமமுக சார்பில் வேட்பாளராக எஸ்.காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2016-இல் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.

தற்போது அமமுக கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் காமராஜ் உள்ளூர் வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

இதற்கிடையில் தனது அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். இதே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் கணிசமான அளவில் முஸ்லீம் வாக்காளர்கள் இருப்பதால், சாகுல் ஹமீது களமிறக்கப்பட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலை இப்போது நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. கஜா புயலினால் அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதி திருவாரூர் என்பதாலும், இங்கு நடைபெற்று வரும் நிவாரணப்பணிகள் இடைத் தேர்தலால் தடைப்படலாம் என்ற காரணத்தாலும், திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் எனவும், கம்யூனிஸ்ட் கட்சி தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது.