கிளந்தானின் சுல்தான் மாஹ்முட் தனது 15-வது மாமன்னர் என்ற பதவியிலிருந்து விலகியுள்ளார் என மாமன்னரின் அரண்மனை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவரது பதவி விலகல் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
அவரது பதவி விலகல் குறித்து பல்வேறு ஆரூடங்கள் கூறப்பட்டாலும், அவரது விலகலுக்கான காரணங்கள் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆனால், எந்த மாமன்னரும் தனது பதவிக் காலத்தின்போது விலகிக் கொள்ளும் நிலைமை மலேசியாவில் இதுவரை ஏற்பட்டதில்லை. இதுவே முதல் முறை!
இதைத் தொடர்ந்து தற்போது துணை மாமன்னராக இருக்கும் பேராக் சுல்தான் ராஜா நஸ்ரின் ஷா மீண்டும் மாமன்னராகத் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு மாமன்னராகத் தற்காலிகமாகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாமன்னர் பதவி விலகுவதற்கான சட்டரீதியான வழிமுறைகளை வழங்கும் மலேசிய அரசியல் சாசன அமைப்பிற்கேற்ப சுல்தான் மாஹ்முட் பதவி விலகியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அவர் மாமன்னராகப் பதவியேற்றார்.
பின்னர் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி சுல்தான் மாஹ்முட் அதிகாரபூர்வமாக மாமன்னராக முடிசூட்டப்பட்டார்.
தன்னை மாமன்னராகத் தேர்ந்தெடுத்த சக சுல்தான்களுக்கும் இன்றைய தனது பதவி விலகல் கடிதத்தின்வழி சுல்தான் மாஹ்முட் நன்றி தெரிவித்துக் கொண்டார் என அரண்மனையின் காப்பாளர் டத்தோ வான் அகமட் அகமட் டஹ்லான் அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.
தனது பதவிக் காலத்தின்போது ஒத்துழைப்பாக இருந்த பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் மாமன்னர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


“மலேசியா தொடர்ந்து அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் பீடுநடை போட, மலேசியர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை நிலைநிறுத்தவும் பாடுபடவேண்டும்” என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாமன்னராகப் பதவி விலகினாலும், சுல்தான் மாஹ்முட் தொடர்ந்து கிளந்தான் சுல்தானாகப் பதவி வகித்து வருவார். தனது மாநில சுல்தான் பொறுப்புகளை ஏற்றுக் கடமையாற்ற கிளந்தான் திரும்புவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
மாமன்னராக பதவி விலகி மலேசியாவில் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் சுல்தான் மாஹ்முட் ஏன் பதவி விலகினார் என்பதற்கான காரணங்களும், பின்னணியில் நிலவிய சூழ்நிலைகளும் நீண்ட நாட்களுக்கு மலேசியர்களால் ஆரூடங்களாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும்.
-இரா.முத்தரசன்