சிங்கப்பூர் – காலம் ஒவ்வொரு மனிதனின் தடத்தினையும் பதித்து, அப்பதிவானது அசாதாரணமான அனுபவங்களை ஏந்தி நிற்கும் பட்சத்தில், இயற்கை அதற்குண்டான அழகையும் மதிப்பையும் உருவப்படுத்திவிடும். வரலாறென்பது, தனியே ஆண்டுகளின் தொகுப்போ சம்பவங்களின் தொகுப்போ அதிகாரத்தில் உள்ள தரப்புகளின் தொகுப்போ கிடையாது. மாறாக அது இவற்றின் ஊடாக நகர்ந்து செல்லும் மக்களுடைய வாழ்க்கையின் தொகுப்பாகும்.
இன்று செய்ததை, நாளை மறந்து, அடுத்த பரபரப்புக்காக இயங்கத் தொடங்கிவிடும் காலக்கட்டத்தில், வருங்கால சந்ததியினருக்கு நம் முன்னோர்களின், தலைவர்களின் பெருமையை காலத்திற்கு ஏற்றவாறு பதிந்தே ஆக வேண்டியிருக்கிறது.
ஒரு நாட்டிற்கு, குறிப்பிட்ட ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணிலடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின், அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிலையங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவார்கள். வரலாற்றில் நிலைத்திருக்கும் படியாக, ஒரு சில இடங்களில் அத் தனி நபரின் உருவச் சிலையை அமைத்தும் நினைவுக் கூருவார்கள்.
அந்த வகையில், சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) சிலைக்கு அருகாமையில், 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய டான் கோட் செங், முன்ஷி அப்துல்லா சிலைகள் உடன், சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான திரு. நாராயண பிள்ளையின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை நினைவுக் கூரும் வகையில் இந்நால்வரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தீவில் உள்ள முக்கிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாராயண பிள்ளை, சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் உடன் பினாங்கிலிருந்து 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரை வந்தடைந்தார். இத்தீவில் வாழ்ந்த இந்திய சமூகத்தின் முதன்மைத் தலைவராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை வந்தடைந்த நாராயண பிள்ளை, தமது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளதை நன்கு உணர்ந்துக் கொண்டு, நிதித் துறையின் முதன்மைத் தலைவராக, முதலில் பதவி வகித்தார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர் விரைவில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவரது இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், மீண்டும் பினாங்கிற்கே சென்று விடலாம் என்ற எண்ணம் எழுந்திருக்கும். நாராயண பிள்ளை அவர்கள் தனது அசாதாரண தைரியத்தால் சிங்கப்பூரிலே தங்கி முதல் செங்கல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு அடுத்த நிலையில், முதல் கட்டிட ஒப்பந்தக்காரராகவும் ஆனார்.
தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில், சிங்கப்பூரில் மிகப் பெரிய மற்றும் பிரபலமான பருத்தி பொருட்களுக்கான சந்தையை அமைத்தார். பெரும்பாலான பிரிட்டன் வணிகர்கள் அவருடன் வியாபாரம் செய்யத் தொடங்கினர். அதிகமாகக் கடன் கொடுத்து துணிகளை சந்தையில் விற்பதற்கு உதவியும் செய்தனர். தொடர்ந்தாற் போல துன்பம் அவரையும் விட்டு வைக்கவில்லை. அவருடைய மொத்தச் சந்தையும் தீயில் கருகியது. இதனால், பிரிட்டன் வியாபாரிகளுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
இறுதியில், நகரத்தின் மையப்பகுதியில் ராபிள்ஸ், திரு. நாராயண பிள்ளைக்கு நிலம் ஒன்றினை வழங்கி, அவரது வியாபாரத்தைப் புது தோற்றத்துடன் ஆரம்பிக்க உதவிச் செய்தார். இத்தனை இன்னல்களுக்கும் இடையே, ஓர் இந்து ஆலயத்தை கட்டியெழுப்ப அவருக்கு ஆசை இருந்தது. அதனை நினைவுக் கூரும் வண்ணமாக தற்போது எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைகிறது. மேலும் இக்கோயில், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாகவும் விளங்குகிறது.
அண்மைய அரசாங்கத்தின் உந்துதலால், நாராயண பிள்ளை, பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு உயர்ந்தார். நாராயண பிள்ளை தனது வாழ்க்கையில் பல்வேறான இன்னல்களை சந்தித்து வந்தாலும், அவருடைய மன தைரியமும் நம்பிக்கையும் அவரை இறுதியில் வெற்றியடையச் செய்துள்ளது.
இவ்வாறாக, சிங்கப்பூரில் பிற்காலத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் குடியேறி இன்று நிரந்தரமாக அங்கு தங்கியிருப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்ததோடு, சிங்கப்பூரின் ஆரம்ப கால வளர்ச்சியிலும் தனது கடும் உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிய காரணத்திற்காகவே நாராயண பிள்ளைக்கு சிங்கையின் மையப் பகுதியில் சிலை நிறுவி அவரை சிங்கை அரசாங்கமும் கௌரவித்துள்ளது.
-செ.நவீன்