Home கலை உலகம் யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை!

யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை!

1025
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க கலையைக் கையில் எடுத்தவர் அவர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பெரும்பாலான இவரின் படங்கள், மதம் மற்றும் இன ரீதியில் ஆழமான கருத்தினை பொதித்து வைத்திருக்கும். மதம், மற்றும் இனம் சார்ந்த அமைப்பினரின் எதிர்மறையான விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் இவரது படைப்புகள் ஆளாகின. அவற்றைக் கடந்து, பெரும்பாலான இவரது படங்கள் திரைப்பட விழாக்களில், சிறந்த திரைப்படங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.    

இப்புகழுக்கு உரிய இயக்குனர் யாஸ்மின் அகமட்டிற்கு எழுப்பப்பட்ட அருங்காட்சியத்தை மேலும் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்ல, அவரது தங்கை ஓர்கிட், சுற்றுலாத்துறை, கலை, மற்றும் பண்பாட்டு அமைச்சர் முகமடின் கெதாபியிடம் உதவிகள் கோரியுள்ளார். மறைந்து 10 வருடங்கள் ஆன போதும், அமைச்சர் முகமடின், யாஸ்மினின் நினைவுகளைத் தம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பெருமையைச் செய்திருக்கிறார் என ஓர்கிட் கூறினார்.

#TamilSchoolmychoice

தனிப்பட்ட தனது டுவிட்டர் பக்கத்தில், அமைச்சர், யாஸ்மின் அகமட்டுக்கு பாராட்டுகளையும், மரியாதையையும் செலுத்தி, மறக்க முடியாத அவரின் சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.

பேராக்கில் உள்ள யாஸ்மினின் அருங்காட்சியகம், அப்பகுதியின் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு சிறப்பு அம்சமாக விளங்குகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெறும், எழுத்துப் படிவ பாராட்டுகளாக மட்டும் அமைந்து விடாமல், அருங்காட்சியகத்திற்கு கூடுமான வரையில் அமைச்சர் நிதி உதவியை ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என ஓர்கிட் தெரிவித்தார்.

இந்த அருங்காட்சியகத்தை சிறப்பான முறையில் இயங்கச் செய்வதற்கு அமைச்சின் உதவித் தேவைப்படுவதாகக் கூறிய ஓர்கிட், தற்போது இருக்கும் வசதியைக் கொண்டு அருங்காட்சியகத்தை வார இறுதியில் மட்டும் திறக்க முடிவதாகவும் கூறினார்.

அருங்காட்சியகம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், யாஸ்மினின் படைப்புகளை ஊக்குவிக்க ஒரு நிரந்தர இடமாகவும், மேலும் முக்கியமாக, பல்வேறு இனங்களின் தேசிய ஒற்றுமை மற்றும் அமைதி போன்ற மதிப்புகளை போற்றக் கூடிய இடமாகவும் இந்த அருங்காட்சியகம் அமையும் என்றார்.

நாட்டில் வெளிப்படையாக இனம், மதம் எனும் பேதத்தை உடைத்து, அழுத்தமான தனது கதைகளால் மலேசியர்களின் மனதில் குடிக்கொண்ட யாஸ்மினின் பிறந்த நாளான இன்று, அவரது எண்ணம் போல இந்நாடு உருப்பெற வேண்டும் என ஓர்கிட் கேட்டுக் கொண்டார்.    

யாஸ்மின் ஆறு முழு நீளத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2009-ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் தனது 51-வது வயதில் காலமானார்.