Home இந்தியா செங்கோட்டையனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு

செங்கோட்டையனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு

1001
0
SHARE
Ad

சென்னை – தமிழக அரசின் நடப்பு கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இனி விளையாட்டுத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது 1998-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் அவருக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்.

வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பாலகிருஷ்ணா ரெட்டி (படம்) தனது பதவியிலிருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

காலியான சட்டமன்ற தொகுதிகள் 21-ஆக உயர்வு

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருக்கும் 20 சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 21-ஆக உயர்ந்தது.

பதவி விலகும் பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமாவார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உடனடியாக காலியானதாக அறிவிக்கப்படும் என இந்திய அரசியல் சட்டம் குறிப்பிடுவதால், பாலகிருஷ்ணா பெறும் தண்டனை காரணமாக, அவரது ஓசூர் சட்டமன்றத் தொகுதி உடனடியாக காலியாகிறது.

இதனால், தற்போது தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் தனக்கு எதிரான சிறைத்தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா மேல்முறையீடு செய்கிறார். அவரது தண்டனையை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைத்திருக்கும் நீதிமன்றம் அவர் அடுத்த ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கியிருக்கிறது.