பெய்ஜிங் : சீன நாட்டு அதிகாரிகள் 1எம்டிபி முதலீட்டு நிதியை காப்பாற்றவும், அதன் ஊழல் விசாரணையை கைவிடுமாறு அமெரிக்காவை அணுகியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என சீன அரசு தெரிவித்துள்ளது.
எந்த நாட்டினது விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்ற கொள்கையை சீனா பின்பற்றி வருவதாகவும், சீனாவிற்கு எதிரான எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அந்நாடு ஏற்றுக்கொள்ளாது என மலேசியாவிற்கான சீன தூதரகம் நேற்று தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கால் நிறுவப்பட்ட 1எம்டிபி நிதித் திட்டம், ஊழல் மற்றும் பண மோசடிக் காரணமாக 6 நாடுகளில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
1எம்டிபியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால், 4.5 பில்லியன் டாலர் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நிதி அமைச்சர் லிம் குவான் எங், வால் ஸ்ட்ரிட் செய்தியில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய அரசாங்கம் விசாரிக்கும் என்று நேற்று அறிவித்தார்.