Home கலை உலகம் திரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்

திரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்

2031
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் வந்திருக்கும் ‘பேட்ட’ படத்தில் ரஜினி இரசிகர்களை கொஞ்சம்கூட ஏமாற்றவில்லை. 68-வது வயதிலும் அவரது உற்சாகம், துள்ளல், சண்டைக் காட்சிகளில் அதிரடி, இளம் வயது கல்லூரி மாணவர்களுடன் துள்ளாட்டம், சிம்ரனுடன் கலகலக்க வைக்கும் நடுத்தர வயதுக் காதல், சைக்கிள் ஓட்டும் இலாவகம், படம் முழுக்க அள்ளித் தெளிக்கும் ‘பஞ்ச்’ வசனங்கள், என அசைக்கமுடியாத தனது கோட்டை இன்னும் அப்படியே இருக்கிறது என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். 90-ஆம் ஆண்டுகளில் பார்த்த அதே ரஜினி – மீண்டும் நம் கண்முன்னே வந்து நின்றதுபோல் இருக்கிறது.

ஆனால், ரஜினியின் நடிப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் திரைக்கதையிலும் மற்ற அம்சங்களிலும் கோட்டை விட்டு விட்டார்.

படம் தொடங்கியது முதலே ஓர் அந்நியத்தனம் தெரிகிறது. வட நாட்டு சிம்லா போன்ற இடத்தில் அமைந்துள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் பேசுகிறார்கள். கல்லூரியின் முதல்வர் கூட ஒய்.ஜி.மகேந்திரன்தான். கல்லூரி உணவகத்தில்கூட இட்டிலி பரிமாறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அங்கு சாதாரண வார்டனாக – கல்லூரி ஹாஸ்டலின் மாணவர்களின் பாதுகாவலராக மிகப் பெரிய சிபாரிசுடன் உள்ளே நுழையும், ரஜினி நடத்தும் அதகளம்தான் முதல் பாதிக் கதை. அதன்பிறகு, ஏன் அங்கு வார்டனாக வந்தார், எந்த மாணவனைப் பாதுகாக்க வந்தார், ஏன் அந்த செயலில் இறங்குகிறார், அவரது இளமைக் காலப் பின்னணி என்ன என்பதைக் கூறுவதுதான் மீதிக் கதை.

முதல் பாதிக் கதையின் அமைப்பும், பரபரப்பும், பின்னப்பட்டிருக்கும் கேள்விகளுடனான மர்மங்களும், சுவையான திருப்பங்களும் – எல்லாவற்றுக்கும் மேலாக – ரஜினியின் துள்ளாட்டமும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இடைவேளைக்குப் பின்னர் படம் தொய்வடைந்து விடுகின்றது.

தமிழ் நாட்டுக்காரர்களான நவாசுடின் சித்திக் மற்றும் அவரது மகன் விஜய் சேதுபதி கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் பாஜக போன்ற ஒரு மதவாத கட்சியில் பெரும்புள்ளிகள் என்பதுபோல் காட்டப்படுகிறார்கள். நடக்குமா இது?

விஜய் சேதுபதி வந்தவுடன் கதை சூடுபிடிக்கும் என்று பார்த்தால், மறுபாதியில் திரைக்கதை சொதப்புகிறது. விக்ரம்-வேதா பாணியில் ரஜினியையும், விஜய் சேதுபதியையும் மோத விட்டிருந்தாலே சுவாரசியமான ஒரு படம் கிடைத்திருக்கும். தவறவிட்டு விட்டார்கள்.

ரஜினியின் இருபது வருடத்திற்குப் பிந்திய மதுரைப் பின்னணிக் கதையிலும் அதே பழைய பாணி, இளமைக் கால ரஜினி என்பதைத் தவிர, மற்றபடி எந்த சுவாரசியமும் இல்லை.

திரிஷாவுக்கு பெரும் அநீதி இழைத்திருக்கிறார் கார்த்தி சுப்புராஜ். இருவருக்கும் இடையில் ஏதோ பஞ்சாயத்து இருந்திருக்கும்போல் தெரிகிறது. ரஜினியோடு முதன் முதலாக ஜோடி சேருகிறார் என இரசிகர்கள் ஆவலோடு அமர்ந்திருக்க, அவருக்கு நான்கு ஐந்து வரிகள் கூட வசனங்கள் இல்லை. ரஜினியும் அவரும் இணைந்து வருவது போன்றுகூட காட்சிகள் அமைக்கப்படவில்லை. திரிஷாவை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது உண்மையிலேயே பெரும் ஏமாற்றம்.

ஆனால், சிம்ரன் மீண்டும் ‘சிக்’கென்ற பழைய உடற்கட்டமைப்புடன், நடுத்தர வயதுக்கே உரிய இயல்பான இளமையுடன் நம்மையும், ரஜினியையும் மயக்குகிறார். ஆனால் அவரையும் பாதியிலேயே அம்போ என விட்டு விட்டு கதை நகர்கிறது.

திரைக்கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். ரஜினி இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார்? தனது நண்பனின் மகனுக்கு 20 வயது வரை தராத பாதுகாப்பை இப்போது ஏன் திடீரென நேரடியாக கல்லூரிக்கு வந்து வழங்குகிறார்? கல்லூரியில் அவ்வளவு அட்டூழியம் செய்யும் பாபி சிம்ஹா, தந்தையுடன் உட்கார்ந்து ஒன்றாக ‘தண்ணி’யடிப்பவர், கொலை, இரத்தம் மட்டும் வேண்டாம் என தந்தையிடம் கெஞ்சுவது கோமாளித்தனம். அவரும் இடையிலேயே காணாமல் போகிறார்.

மதுரைக் காட்சிகளிலும் செயற்கை. வில்லனைத் தானே கொல்வதாக ரஜினி சொல்வதும் அதற்கு மற்ற கதாபாத்திரங்கள் ஆதரவு தெரிவித்து அவரை கொலை செய்யச் சொல்வதும் நம்ப முடியவில்லை. நடுரோட்டில் அந்த வில்லனைத் துப்பாக்கியால் ரஜினி சுட்டுக் கொல்வதும் ஏற்க முடியாத திரைக்கதை.

அடுத்த தமிழக முதல்வராக வர அரசியலைக் கட்டமைக்க நினைக்கும் ரஜினி வரிசையாக படங்களில் குண்டர் கும்பல் தலைவனாகவும், இந்தப் படத்தில் பட்டவர்த்தனமாக கொலைகளில் ஈடுபடும் அடாவடிக்காரராகவும் நடிப்பது நெருடல்.

அதிலும் இள வயதில் வில்லனை துப்பாக்கியால் ஒரே தோட்டாவில் கொல்லும் ரஜினி, உச்சகட்டக் காட்சியில் நோய்வாய்ப்பட்டு வயது முதிர்ந்தவராக வரும் நவாசுதின் சித்திக்கை நாற்காலியில் உட்காரவைத்து சுற்றிலும் நான்கைந்து பேர்களை விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது….தாங்க முடியவில்லை. நவாசுதின் மட்டும் ஒரே தோட்டாவில் இறக்க மாட்டாரா?

இப்படியாக ஏகப்பட்ட ஓட்டைகள், குழப்பங்களுடன் நகரும் திரைக்கதையை தூக்கி நிறுத்தும் மற்றொரு அம்சம் அனிருத்தின் இசை. தடாலடி பின்னணி இசை, துள்ளாட்டம் போடவைக்கும் பாடல்கள் என பின்னி எடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

ரஜினியைப் பயன்படுத்திக் கொள்ள – அவரை வைத்து சிறந்த படத்தை வழங்க – கார்த்தி சுப்புராஜ் அற்புதமான வாய்ப்பைக் கோட்டை விட்டு விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

ஆனாலும், ‘பேட்ட’ படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம் ….

காரணம்,

ரஜினி – ரஜினி – ரஜினி!

-இரா.முத்தரசன்