லோஸ் கத்தோஸ் (கலிபோர்னியா) – கட்டணத்துக்கு இணையம் வழி திரைப்படங்களை வழங்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் அண்மையில் தனது படைப்புகளில் கதைசொல்லும் பாணியில் ஒரு புரட்சிகரமான புதுமையான பாணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதே வேளையில் கள்ளத்தனமாக நெட்பிலிக்ஸ் படங்களைப் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக இந்த நடைமுறை மாறக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
அண்மையில் நெட்பிலிக்ஸ் பதிவேற்றிய “பிளேக் மிரர் : பேண்டர்ஸ்னாட்ச்” (Black mirror: Bandersnatch) என்ற திரைப்படத்தில்தான் இந்தப் புதுமையைக் கையாண்டுள்ளது.
எல்லாம் சரி! அந்தப் புதுமைதான் என்ன?
நீங்கள் பேண்டர்ஸ்னாட்ச் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான திருப்பம் கதையில் வரும்போது, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதற்கு இரண்டு தேர்வுகளை அத்திரைப்படம் கொடுக்கும். படம் பார்க்கும் இரசிகன் குறுகிய நேரத்திலேயே அந்த இரண்டு தேர்வுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக, ஒரு காட்சியில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது என வைத்துக் கொள்வோம். கதவைத் திறக்கச் செல்லும் கதாபாத்திரம் கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்ற தேர்வைச் செய்ய வேண்டி திரையில் தோன்றும் தேர்வுகள் வழிகாட்டும். கதவைத் திறந்து விட்டால், படத்தின் கதை ஒரு போக்கில் செல்லும். கதவைத் திறக்காவிட்டாலோ திரைப்படம் இன்னொரு கோணத்தில் தனது பயணத்தைத் தொடரும். இப்படியாக படத்தின் இடையிடையே முடிவுகள் எடுக்கும் நிலைமைக்கு படம் பார்க்கும் இரசிகன் தள்ளப்பட்டு திரைக்கதை போய்க் கொண்டே இருக்கும்.
நீங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் திரைக்கதையின் போக்கை நிர்ணயிக்கும் முடிவை எடுக்காவிட்டால், அந்தத் திரைப்படமே தனது சொந்த முடிவை எடுத்துக்கொண்டு அடுத்த காட்சிக்கு நகரும்.
ஆனால், நீங்கள் ஒரு முடிவை எடுத்து விட்டால், அந்த முடிவின்படி செல்லும் படத்தைத்தான் பார்க்க முடியுமே, சரி திரும்பிப்போய் அந்த மற்றொரு தேர்வு என்ன (உதாரணமாக மேற்குறிப்பிட்ட காட்சியில் கதவு திறந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்) என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. அப்படித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மீண்டும் நீங்கள் படத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்து அந்தக் குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மீண்டும் உங்களின் தேர்வைச் செய்து அதன்பிறகு அந்தப் படம் எந்தப் போக்கில் செல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நெட்பிலிக்சின் இந்தப் புதுமையான கதை சொல்லும் பாணி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்று வரும் வேளையில், இந்த புதுமை தங்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது – திருடப்பட்டது – எனக் கூறி சூஸ்கோ எல்எல்சி (Chooseco, LLC) என்ற நிறுவனம் நெட்பிலிக்ஸ் மீது வழக்கு தொடுத்துள்ளது.
நெட்பிலிக்சின் இந்தப் புதுமையான நடைமுறை ஏற்கனவே தங்களின் “உங்களின் சொந்த சாகசப் பயணத்தைத் தேர்வு செய்யுங்கள்” (Choose Your Own Adventure) என்ற நூல்களின் வரிசையிலிருந்து காப்பியடிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கும் சூஸ்கோ நிறுவனம் அதற்கான 25 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு – அல்லது அந்த பிளேக்மிரர் திரைப்படத்திலிருந்து கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி – எது அதிகமோ அந்தத் தொகையைத் தங்களுக்குச் செலுத்த வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறது.