கோலாலம்பூர்: முன்னாள் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜ்,நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன் மீது வாக்குகள் வாங்கப்பட்டதாகக் கூறி புகார் ஒன்றை அளித்தார்.
இது குறித்து சிவராஜ் கூறுகையில், நீதியை நிலைநிறுத்தவே தாம் இவ்வாறு செய்ததாகவும், பழிவாங்கும் எண்ணத்தில் இந்தப் புகார் செய்யப்படவில்லை எனவும் கூறினார்.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர், அர்மாண்ட் அஷா, மஇகா தகவல் பிரிவுத் தலைவர் வி.குணாளன், மற்றும் மஇகா உறுப்பினர்கள் சிவராஜுடன் நேற்று ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்திருந்தனர்.
“எனது புகார் அறிக்கை பொதுவானது. கடந்த 14-வதுபொதுத்தேர்தல் மற்றும் தற்போது நடைபெற இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் ஊழல் நடந்துள்ளது என பலர் புகார் கூறி வருவதால், மலேசியக் குடிமகனாக, இந்தப் புகாரை செய்திருக்கிறேன். ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தில், முழு ஆய்வினை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்”, என்று சிவராஜ் கூறினார்.
அவ்வறிக்கையில் மனோகரன் பண அரசியலில் ஈடுபட்டதாக சிவராஜ் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் குற்றங்கள் சட்டம் மற்றும் 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் கீழ் மனோகரன் தவறிழைத்திருப்பதாகவும் சிவராஜ் குற்றம் சாட்டினார்.
ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சிவராஜ் கேட்டுக் கொண்டார். இந்தப்புகார் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம், விசாரணை செய்து குற்றவாளியை நீதியின் முன் கொண்டுவரும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக சிவராஜ் தெரிவித்தார்.