சென்னை: சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’, இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்பக் கதையை மையமாக வைத்துப் படம் நகர்த்தப்பட்டிருந்தாலும், படத்தின் பின்புலமாக அமைந்தது விவசாயம்.
இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் கார்த்தி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், தாம் ‘உழவன் அறக்கட்டளை’ எனும் அமைப்பை தொடங்கியிருப்பதை அறிவித்தார்.
விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் அழுத்தமாக இருக்க, தமது அண்ணன் சூர்யாவின் உதவியுடன் இந்த அமைப்பை கார்த்தி தொடங்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த அமைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி ஆரம்பித்துள்ளதாக கார்த்தி கூறினார்.
விவசாயிகளைப் போற்றும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு ‘உழவன் விருதுகள்’ எனும் திட்டத்தினையும் தொடங்கியுள்ளதாக கார்த்தி கூறினார். இதன் முதல் கட்டமாக ஜீ டிவியின் ஒத்துழைப்புடன் இந்த வருடம் உழவன் விருதுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 இயற்கை விவசாயிகளை தேர்ந்தெடுத்து, ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறினார். விவசாயிகள் மேலும் பல நன்மைகளை அடைவதற்கு, இந்த அறக்கட்டளை பெரிய அளவில் வளர வேண்டும் என அவர் நம்பிக்கைக் கொண்டார்.
விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் நமது நன்றிக்கடனை செய்தாக வேண்டி உள்ளதன் அவசியத்தை அறிந்துக் கொண்ட பின்பே, இந்த அமைப்பை தாம் தொடங்கியதாகக் கூறி அவர் நெகிழ்ந்தார்.