ஜோர்ஜ் டவுன்: இவ்வருடம் பினாங்கு தங்க இரதம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெள்ளி இரதம் “கோயில் வீடு” என்ற இடத்திலிருந்து இருந்து புறப்படும் என நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில் அறங்காவலர் டாக்டர் ஏ. நாராயணன் கூறினார்.
இந்த நடைமுறையானது, தைப்பூசத்தின் போது, வெள்ளி இரதம் சுலபமாக நாட்டுக்கோட்டை மற்றும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில்களை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதற்கு ஏதுவாக அமையும் என நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார்.
2017- ஆம் ஆண்டு தங்க இரதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாண்டிலிருந்து வெள்ளி இரதம் குறிப்பிட்ட நேரத்தில் நாட்டுக்கோட்டை மற்றும் பாலதண்டாயுதபாணி கோயில்களை அடைய முடியாமல் தாமதமாகி வருவதை நாராயணன் சுட்டிக் காட்டினர்.
இதற்கு முன்னர், நள்ளிரவு 12 மணியளவில் இரதம் தண்ணீர் மலைக் கோயிலை வந்தடைந்து விடும், ஆனால் கடந்த 2017-ல் அதிகாலை 4:30 மணியளவிலும், சென்ற ஆண்டு காலை 2:30 மணியளவிலும் கோயிலை வந்தடைந்தது என்றார் அவர்.
வருகிற ஜனவரி 20-ஆம் தேதி வெள்ளி இரதம் கோயில் வீடு இடத்திலிருந்து இருந்து பகல் 7 மணிக்கு புறப்பட்டு ,நள்ளிரவு வாக்கில் தண்ணீர் மலைக் கோயிலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.