கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி மோசடியில்,முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் வங்கி அதிகாரி டிம் லெய்ஸ்னர் சம்பந்தப்பட்டிருப்பதால்,அதன் தலைமை நிருவாக அதிகாரி டேவிட் சாலமன் மலேசியர்களிடம் மன்னிப்புக் கோரினார். தற்போது கோல்ட்மேன், மலேசியா மற்றும் அமெரிக்க உயர் தரப்புகளால் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, அமெரிக்க வழக்கறிஞர்கள், முன்னாள் கோல்ட்மேன் பணியாளர்கள் 1எம்டிபி நிதியிலிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட்டை திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, ஆசியாவின் முன்னாள் கோல்ட்மேன் சாச்ஸ் பங்குதாரரான லெய்ஸ்னர், கள்ளப் பண பறிமாற்றம் மற்றும் அயல்நாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை மீறியதாக ஒப்புக் கொண்டார்.
“முந்தைய மலேசிய அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் உட்பட, மலேசியர்கள் பல நபர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது” என சாலமன் கூறினார்.
2009 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையே, 1எம்டிபியின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள், 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.