ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம் குறித்த விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. நீதிபதி ரோபியா முகமட் முன்னிலையில் இவ்விசாரணை நடத்தப்பட்டது.
உடல் பாகங்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் அடிப் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.
அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் தோமி தோமஸ் உத்தரவிட்டிருந்தார்.
அடிப்பின் மரணம், மற்றவர்களின் சட்ட விரோத நடவடிக்கையினால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிப்பதற்காக, இந்த விசாரணையை நடத்த வேண்டியிருப்பதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் சமீபத்தில் ஓர் அறிக்கையின் வாயிலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து, காவல் துறையினர் ஏற்கனவே பல்வேறு நபர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர் அடிப்பின் பிரேத பரிசோதனையின் போது சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனவும் முஹிடின் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வருகிற பிப்ரவரி 11-28, மார்ச் 1,4,5 மற்றும் 19-29 , மற்றும் ஏப்ரல் 1-12 தேதிகள், முகமட் அடிப்பின் மரணத்திற்கான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தேதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்பின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள 30 சாட்சிகளுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுக்கும்.