ஜெருசேலம்: மலேசியா இம்முறை ஏற்று நடத்தவுள்ள அனைத்துலக நீச்சல் விளையாட்டு நிகழ்ச்சியில், இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் பங்குக் கொள்ள முடியாது என பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு, இது பிரதமர் மகாதீரின் வெறித்தனமான யூத விரோதச் செயலாகும் என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.
மலேசியா, பல ஆண்டுகளாக, இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை பராமரிக்காத நிலையில், சரவாக்கில் நடைபெற இருக்கும் அனைத்துலக உடல் ஊனமுற்றோருக்கான நீச்சல் போட்டியில், இஸ்ரேலிய வீரர்களைத் தடைச் செய்தது. தென்கிழக்காசியா நாட்டில் எந்தவொரு நிகழ்ச்சியிலிருந்தும் இஸ்ரேலியர்களைத் தடை செய்வதாகவும் அது அறிவித்தது.
நேற்று ஓர் அறிக்கையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், இமானுவேல் நாஷோன், அனைத்துலக பாராலிம்பிக் அமைப்பினை, இந்தப் போட்டியை வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
“இது முழுக்கவும் வெட்கக்கேடானது மற்றும் ஒலிம்பிக் உணர்வுக்கு முற்றிலும் எதிர்ப்பானது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மலேசியஅரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டினால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அனைத்துலக பாராலிம்பிக் அமைப்பு ஓர்அறிக்கையில் கூறியதுடன், அடுத்த வாரம் இது குறித்து இங்கிலாந்தில் சந்திப்புக் கூட்டம் ஒன்றில் விவாதிக்கப்படும் எனக் கூறியிருந்தது.