பத்துமலை: நேற்றிரவு பத்துமலை தைப்பூசத்தின் போது, பட்டாசைக் கொளுத்தி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் காயம் ஏற்படக் காரணமாயிருந்த மேலும் ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சம்சோர் மாருப் கூறுகையில், 25 வயது நிரம்பிய அந்த ஆடவனை காவல் துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மணி 3 மணியளவில் கைது செய்தனர் என்றார்.
இதுவரையிலும் இந்தச் சம்பவம் குறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மூவரில் ஒருவனுக்கு ஏற்கனவே குற்றச் செயல்களை செய்ததற்கான குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும், இவர்கள் மீது சிறுநீர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 34 பேரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டதாக சம்சோர் கூறினார்.