Home நாடு கேமரன் மலை : ரம்லி 12,038 வாக்குகள் – மனோகரன் 8,800

கேமரன் மலை : ரம்லி 12,038 வாக்குகள் – மனோகரன் 8,800

1149
0
SHARE
Ad

தானா ரத்தா – கேமரன் மலை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது என்பதை விட, மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பது மலேசிய அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, தேசிய முன்னணியின் இன அரசியல் வியூகம் வெற்றி பெற்றிருப்பதையே காட்டுகிறது.

22 விழுக்காடு பூர்வ குடியினரை வாக்காளர்களாகக் கொண்ட கேமரன் மலையில், முதன் முறையாக பூர்வ குடி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தேசிய முன்னணி வகுத்த புதிய வியூகம் அபார வெற்றியைத் தந்துள்ளது.

தேசிய முன்னணியின் வேட்பாளர் ரம்லி 12,038 வாக்குகள் பெற்ற நிலையில் எம்.மனோகரனுக்கு 8,800 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் 3,238 வாக்குகள் பெரும்பான்மையில் ரம்லி வெற்றி பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சுயேச்சையாகப் போட்டியிட்ட சாலேஹூடின் அப்துல் தாலிப் 314 வாக்குகளும் மற்றொரு சுயேச்சையான வோங் செங் யீ 276 வாக்குகளும் பெற்றனர்.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் பூர்வ குடி இனத்தவராக ரம்லி சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.

பாஸ் கட்சியுடன் அம்னோ கொண்டிருக்கும் இணக்கமான போக்கும் தேசிய முன்னணியின் கேமரன் மலை வெற்றிக்குத் துணை புரிந்துள்ளது.

Cameron Highlands – Parliament – facts & figures

14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3,587 வாக்குகள் பெற்று தோல்வி கண்டது. ஆனால், இன்று நடந்த இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால், பாஸ் ஆதரவாளர்களின் வாக்குகளும் தேசிய முன்னணிக்கு விழுந்திருக்கின்றன.

13-வது பொதுத் தேர்தலில் 462 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டும் தேசிய முன்னணியின் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு வென்ற கேமரன் மலை தொகுதியில் 14-வது பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளரான சிவராஜ் சந்திரன் 597 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

ஆனால், இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையில், நம்பிக்கைக் கூட்டணியின் அத்தனை தலைவர்களும் – பிரதமர் துன் மகாதீர் உட்பட – பிரச்சாரக் களத்தில் தீவிரமாக இயங்கிய சூழ்நிலையிலும், தேசிய முன்னணி 3,238 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு