பெட்டாலிங் ஜெயா – பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும், பெர்சே இயக்கத்தின் முன்னாள் தலைவருமான மரியா சின் அப்துல்லாவின் மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மெதுவோட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கொள்ளை முயற்சி ஒன்றின் காரணமாக கத்திக் குத்துக்கு இலக்கானார்.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தாமான் மாயாங் வீடமைப்புப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தின் ஓசிபிடி கு மஷாரிமான் கு மாஹ்முட் 26 வயதான மரியா சின் மகன் மாலை 6.00 மணியளவில் வயிற்றின் வலதுபுறத்தில் ஆடவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார் எனத் தெரிவித்தார்.
மரியா சின் மகனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கத்திக்குத்துக்கு ஆளான அவர் மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தெரிவித்த கு மஷாரிமான் கொள்ளை முயற்சியாக வகைப்படுத்தி இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பெர்னாமாவிடம் பேசிய மரியா சின் அப்துல்லா, தனது மகனுடன் பேசியிருப்பதாகவும், அவருக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம் என்றும் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனைக்காகக் காத்திருப்பதாகவும் மரியா சின் அப்துல்லா குறிப்பிட்டார்.