கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்பதும் தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களின் மனக் குறையாகும்.
இத்தகைய சூழ்நிலையில், கெடா மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறந்த ஆசிரியர்கள் சிலரை பணியிட மாற்றம் என்ற பெயரில் மற்ற தேசியப் பள்ளிகளுக்கு மாற்றும் போக்கை கல்வி அமைச்சும், கெடா மாநில கல்வி இலாகாவும் அண்மையக் காலமாகப் பின்பற்றி வருவது குறித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கண்டனங்கள் கடந்த சில நாட்களாக முகநூல் பக்கங்களில் பகிரங்கமாகப் பதிவிடப்பட்டு வருகிறது.
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்றாலும், பணியிட மாற்றம் என்றாலும், அவர்களை ஆசிரியர் பற்றாக் குறை கொண்ட தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தால், அந்தப் பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக் குறைப் பிரச்சனை தீருவதோடு, அந்த ஆசிரியர்களின் அனுபவமும் கற்பிக்கும் திறனும் இன்னொரு தமிழ்ப்பள்ளிக்கும் அதன் மாணவர்களுக்கும் பெருமளவில் உதவக் கூடும்.
ஆனால், அதைவிடுத்து, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை இன்னொரு தேசியப் பள்ளிக்கோ, மற்ற மொழிப் பள்ளிக்கோ அனுப்பி வைப்பதன் மூலம், ஒரு தமிழ்ப் பள்ளியில் அவர்கள் பெற்ற பட்டறிவும், அனுபவமும் இன்னொரு தமிழ்ப் பள்ளிக்குப் பயன்பட முடியாத அவல நிலை ஏற்படுகிறது.
எல்லாப் பள்ளிகளும் முக்கியம்தான்! எல்லா மாணவர்களும் – அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – முக்கியம்தான். ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் எல்லா மாணவர்கள் மீதும் பாரபட்ச முறையில் தங்களின் கற்பிக்கும் திறனைக் கடத்த வேண்டும் – என்பதுதான் ஆசிரியர் தொழிலின் தர்மமாகும்.
ஆனால், தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை கடுமையாக நிலவும்போது, தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமான நடவடிக்கையா என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கல்வி அமைச்சு இந்தப் பிரச்சனையைக் கவனத்தில் கொண்டு தீர்வு காணுமா?
அல்லது, இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா?