கோலாலம்பூர்: அரசாங்கம் அமைத்து நூறு நாட்களுக்குள் குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்த்து விடுவோம் எனக் கூறிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் காலத் தாமதமான செயல்பாட்டை, மஇகா கட்சியின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி. மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேறு சில உறுதிமொழிகளை நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைவேற்றாவிட்டாலும், ஒரு தனி நபரின் உரிமையைப் பாதிக்கும், குடியுரிமைப் பிரச்சனையை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கூறினார்.
அரசாங்கம் அமைப்பதற்கு முன்பதாக, நாட்டில் 300,000 மேற்பட்ட மக்கள் குடியுரிமைப் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளதாகவும், தேசிய முன்னணி இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை நம்பிக்கைக் கூட்டணி அரசு குறிப்பிட்டுக் கூறியதை மோகன் சுட்டிக் காட்டினார்.
“இப்போது எல்லாம் அமைதியாக இருக்கிறது. யாருக்கும் பேச தைரியம் இல்லை” என மோகன் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.