கோலாலம்பூர் – பாஸ் கட்சிக்கு நஜிப் 90 மில்லியன் ரிங்கிட் வழங்கினார் என்ற விவகாரம் தற்போது ஒரு சர்ச்சையாகியுள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்த விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடக்கியுள்ளது.
பாஸ் கட்சிக்கு 90 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாக தனிநபர் ஒருவர் புகார் ஒன்றைச் செய்ததைத் தொடர்ந்து விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் தடுப்பு ஆணையம், காவல் துறையினரிடமிருந்து நேற்று பிப்ரவரி 5-ஆம் தேதி புகார் ஒன்றைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி உதவி, மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பணம் பெறுதல் ஆகிய குற்றங்களுக்கான 2001 சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.
அம்னோ அல்லது நஜிப்பிடமிருந்தோ, 1எம்டிபி நிறுவனத்திடமிருந்தோ பாஸ் கட்சி அல்லது அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் 90 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றாரா என்ற நோக்கத்தில் இந்த விசாரணைகளை ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தும்.
எனினும், பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை – அது பொய்யான குற்றச்சாட்டு என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
ஹாடி அவாங் நஜிப்பிடம் இருந்து 90 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து அந்த செய்தி பொய்யானது என ஹாடி அவாங் சரவாக் ரிப்போர்ட்டர் ஆசிரியர் ரியூகாசல் பிரவுன் மீது இலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இருதரப்புகளுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.
எனினும், சர்ச்சைக்குரிய அந்த கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட் ஊடகத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால், இதுகுறித்து ஹாடி அவாங்கின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்புகள் சர்ச்சைகள் வெளியிட்டு வருகின்றன.
அந்தக் கட்டுரை தொடர்ந்து சரவாக் ரிப்போர்ட்டர் தளத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதால் தன்மீதான குற்றச்சாட்டும் களங்கமும் நீங்கிவிட்டதாக உணர்வதாக ரியூகாசல் பிரவுன் கூறியுள்ளார்.