Home நாடு “நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்

“நிறைந்த மனதுடன் மாநில தமிழ்ப் பள்ளி அமைப்பாளராக பணி ஓய்வு பெறுகிறேன்” ஜோகூர் சி.பாண்டுரெங்கன்

2799
0
SHARE
Ad

ஜோகூர் – கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின்  அமைப்பாளராக சிறந்த முறையில் சேவைகளை  வழங்கிய பாண்டுரெங்கன் சின்னக் கண்ணு, தன்னால் இயன்ற அளவுக்கு ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டிருக்கும் மனநிறைவோடு, பணி ஓய்வு பெறுவதாகவும், தன்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும்  நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

“ஜொலிக்கும் ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் காவலர்களே…இந்த உன்னதப் பணியில் உற்சாகத்தோடு தமிழ்த் தேரை இழுக்க என்னோடு வடம் பிடித்து ஊர்வலம் வந்த புனித ஆத்மாக்களே…

மண்மேடாக இருந்த பள்ளிகளை மாடமாளிகையாக்கிய மாண்புமிகுக்களே…
நம் தமிழ்ப்பள்ளிகளை உழைப்பாலும் உதிரத்தாலும் வியர்வையாலும் தியாகத்தாலும் அலங்கரித்தவர்களே… தலைமையாசிரியர்களே ஆசிரியர்களே…

#TamilSchoolmychoice

கனத்த இதயத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்….” என சமூக ஊடகங்களிலும், நண்பர்களோடும் பகிர்ந்து கொண்ட அறிக்கையில் பாண்டுரெங்கன் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் சி.பாண்டு ரெங்கன் சிறப்பிக்கப்பட்டபோது…

தனது பணி ஓய்வு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்த பாண்டுரெங்கன் “கல்விப்பணியை இறைப்பணியாகச் சபதமேற்று என்னோடு பணியில் பயணித்தவர்களுக்கும் தக்க நேரத்தில் உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கும் தடுமாறிய சமயத்திலெல்லாம் உற்சாகம் ஊட்டி மேலும் சிறப்புடன் செயல்பட ஆதரவு வழங்கி என் 33 ஆண்டுக்கால கல்விப்பணியை நிறைவு செய்ய உதவிய நல் ஆத்மாக்கள் அனைவரின் மலர்ப் பாதங்கள் பணிந்து வணங்குகின்றேன்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“வித்யா கல்வியோடு ஞானக் கல்வியையும் சாகும் கல்வியோடு சாகாக் கல்வியையும் இணைத்தே நமது தமிழப்பள்ளிகளுக்கு ஊட்டியுள்ளேன். தமிழ்க் கல்வியோடு நமது பண்பாடு நாகரீகத்தையும் கலை கலாச்சாரத்தையும் வரலாற்றையும் நமது அடையாளத்தையும் தமிழ் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் கலைகளையும் சரித்திரங்களையும் காட்டி … இதுதான் உன் உண்மையான பாரம்பரியம் பரம்பரை சொத்து என்று பின்னோக்கிச் சென்று பிளாஷ் பேக் போட்டு விளக்கியுள்ளேன். மேலும், தமிழ்ப்பள்ளிகள் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளையும் தூர நோக்கையும் தீர்க்க தரிசனத்தையும் உரைத்துள்ளேன்.”

“கடந்த 10 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு நிறைய கட்டிட நிர்மாணிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன… 95% பள்ளிகள் புதுப் பொலிவுடன் மாற்றம் கண்டு ஜொலிக்கின்றன. நிறையப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வெகு விரைவில் இவ்வாண்டு மேலும் 5 பள்ளிகள் இடமாற்றம் காணவிருக்கின்றன. நமது சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு புதிய தமிழ்ப்பள்ளியும் திறக்கப்படவுள்ளன” என்ற விவரங்களையும் பாண்டுரெங்கன்  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் தான் லனான்ரோன் தோட்ட மாணவன் எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ள பாண்டுரெங்கன்  தொடர்ந்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“நமது பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக அரங்கிலும் தொடர்ந்து சாதித்து சாதனை படைத்து வருகின்றனர். இவற்றில் ஜோகூர் மாநிலமே முன்னணி வகிக்கின்றன. கல்வி உருமாற்றுத் திட்டத்தில் (Sekolah Transformasi) அதிகமான தமிழ்ப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. யுபிஎஸ்ஆர் தேர்வில் 74% தேர்ச்சி பெற்று உயர்வான நிலையில் உள்ளனர்.  நவீன வசதிகளோடு புதிய தளவாடப் பொருட்களுடனும் உயர்தர பாடத் திட்டங்களுடன் பல தோட்டப்புறப் பள்ளிகளும் இன்று பட்டணத்துப் பள்ளிகளுக்கு ஈடாக மாற்றம் கண்டு வருகின்றன…பல பள்ளிகளில் நிர்வாகத்திற்கும் பெற்றொர் ஆசிரியர் சங்கத்திற்கும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் பொது இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல்களைத் தடுத்து நல்லதொரு உறவை மேம்படுத்த உதவியுள்ளேன். கல்வி இலாகாவில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு 3 ஆண்டுகள். முடிந்த அளவு என் பணியைச் சேவையாக எண்ணி உழைத்துள்ளேன்.

“தெரிந்தோ தெரியாமலோ நான் கடுமையான வார்த்தைகளைப் பயன் படுத்தியிருந்தாலோ மனம் நோகும்படிப் பேசியிருந்தாலோ இத்தருணத்தில் மன்னிப்புக் கேட்டுப் கொள்கிறேன்…

திருவள்ளுவரின் அறத்தை முன் நிறுத்தி இறைவனுடன் சங்கல்பம் செய்து தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் இன்னும் உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்ல என் வாழ்த்துக்கள்”.