புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைக் கண்டித்து உலக நாடுகள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. இச்சம்பவத்தில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததோடு, இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பின்பு, 300 கிலோ எடை கொண்ட வெடிப் பொருட்களை எஸ்சுவி ரக காரில் ஏற்றி வந்த ஜயிஷ் இ முகமது (Jaish-e-Mohammed) தீவிரவாதி சிஆர்பிஎப் வாகனத்தின் மீது மோதச் செய்ததில், 40 வீரர்கள் பலியாயினர். இந்தத் தாக்குதல் இந்திய நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.