கடந்த வார பிற்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம்பிக்கைக் கூட்டணி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள், குறிப்பாக இந்திய சமுதாயம் சார்ந்த நடவடிக்கை குறித்தெல்லாம் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
எந்த அமைப்பு எவ்வளவு நிதி பெற்றது, நிகழ்ச்சி நடைபெற்ற இடம், பயனாளிகள் குறித்த எல்லாத் தகவலையும் பொதுமக்களே நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்திய சமுதாயம் மேம்பாடு அடைவதற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதைப்போல, மானியம் பெறும் தரப்பினரும் சமூகக் கடப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் மேலும் சொன்னார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் கடந்த ஆட்சியின்போது, இப்படி ஒதுக்கப்பட்ட நிதியினால் சமூகம் எந்த அளவுக்கு பயன் அடைந்துள்ளது என்ற விவரம் ஒன்றும் தெரியவில்லை. கல்வி சம்பந்தமாக ஏராளமான மானியம் வழங்கப்-பட்டும் அதன்வழி மாணவர்கள் எந்த அளவுக்கு பயன் அடைந்துள்ளனர் என்ற விவரம் ஏதுமில்லை. அதைப்போல, மற்ற வகையில் நிதி பெற்றவர்களும் அதை எந்த அளவுக்கு அதை பொது நோக்கில் பயன்படுத்தினர் என்பதற்கும் தகவல் ஏதுமில்லை. இளந்தொழில் முனைவோர், தொழில் பயிற்சி, இந்தியப் பெண்களுக்கான முன்னேற்றம் உட்பட எது குறித்தும் எந்தத் தரவும் இல்லை.
அமைச்சரின் பேராக் மாநில சிறப்பு அதிகாரி நாகேஷ் கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், பேராக் மாநில தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.நற்குணன் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் உட்பட ஏறக்குறைய நூறு பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தனிப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.