Home நாடு வேலையிடப் பாதுகாப்பு – சுகாதார உதவிகள்

வேலையிடப் பாதுகாப்பு – சுகாதார உதவிகள்

1332
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகம் (NIOSH) வேலையிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாடு அடைய தொழிற்துறையினருக்கு உதவிபுரியவுள்ளது. அனைத்து இடங்களிலும் குறிப்பாகப் வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் விபத்துகளைத் தடுக்கலாம். நியோஷ் எனப்படும் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகம் (NIOSH) அன்றாட பணிச் செயல்முறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை முதன்மைப்படுத்துவதை உறுதிசெய்யும் பொறுப்பினை எப்போதுமே ஏற்று வந்துள்ளது, அந்த அமைப்பின் துணைத் தலைவர் குணசேகரன் கந்தசாமி (படம்) ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் குணசேகரன் மேலும் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:-

“வேலையிடத்தில் பாதுகாப்பைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துதல் மற்றும் வேலையிட விபத்துகளைக் குறைப்பதற்கு நீடித்த நடைமுறைத் தீர்வுகளை தொழிற்துறையினருக்கு அளிப்பதன் வழி மலேசியாவில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் (OHS) சிறப்பானதொரு மையமாக இருக்கவேண்டும் என்ற நியோஷின் நோக்கத்தின் வாயிலாக புலப்படுகிறது.

#TamilSchoolmychoice

தொழிலாளர்களுக்கு அவர்களது வேலையில் போதுமான பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் வழி வேலையிடத்தில் விபத்துகளைத் தடுக்க முடியும். இது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச்சட்டம் – AKKP 1994 (சட்டம் 514) — பகுதி IV-ஐ அடிப்படையாகக் கொண்டது. இதில் தொழிலாளர்களை மேற்பார்வையிட்டு தொடர்ந்து தேவையான தகவல், நெறிமுறை மற்றும் பயிற்சி மூலம் அவர்களது வேலையிடப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது முதலாளியின் பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக வேலையிடப் பாதுகாப்பு திறன்வாய்ந்த பணியாளர் (OYK), தள பாதுகாப்பு கண்காணிப்பாளர், இராசயன சுகாதார இடர் மதிப்பீட்டாளர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும். இவ்வல்லுநர்களது சேவை குறிப்பாக தங்களது வேலையிடங்கள் OSHA 1994-இன் சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்வதில் நிர்வாகத்திற்கு உதவுவதாகும்.

நியோஷ் என்பது இத்தகைய தகுதிவாய்ந்த நபர்களைப் பயிற்றுவிப்பதற்காக மனிதவள அமைச்சின் (MOH) கீழ் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2018 வரை NIOSH 6,595 பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் (SHO), மற்றும் 4,640 தள பாதுகாப்புக் கண்காணிப்பாளர்களை (SSS) பயிற்றுவித்திருக்கிறது. மேலும் NIOSH, உயரமான இடங்களில் பணிபுரிதல், சாரக்கட்டு நிறுவுதல், குறுகலான இடங்களில் பணிசெய்தல், கோபுர ஓங்கிகளை இயக்குதல், கயிற்றமைவுகள் அமைத்தல் மற்றும் பாரந்தூக்குதல் போன்ற வேலைகளுக்கும் பயிற்சியளிப்பது உட்பட கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் பல திட்டங்களையும் வழங்குகிறது.

திறன் மற்றும் தகுதி அடிப்படையிலான பயிற்சி திட்டங்களும் இங்கு உள்ளன; இவை தொழிலாளர்களிடையே அணுகுமுறை மற்றும் பணிப் பண்பாட்டை வடிவமைப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு நடத்தப்படுகின்றன. முக்கியமாக கட்டுமானப்பகுதியில் வேலையிடப் பாதுகாப்பைப் பற்றி தொழிலாளர்களுக்குக் கற்பிக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளில் “ஜோம்பினா செலாமாட்” இயக்கம், பாதுகாப்பு அறிமுகத் திட்டம், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 (OSHA 1994), தொழிற்சாலை மற்றும் இயந்திரத் தொகுதி சட்டம் 1967 (FMA 1967) போன்றவையும் அடங்கும்.

HRDF (மனிதவள மேம்பாட்டு நிதியில்) பதிந்த முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களை NIOSH பயிற்சித் திட்டங்களுக்கு அனுப்பினால் அவர்கள் HRDF பயிற்சி மானியம்வழி தங்கள் செலவினத்தைத் திரும்பப்பெறும் தகுதி உடையவர்களாவர். பயிற்சித் திட்டத்தின் நான்கு பிரிவுகளில் சட்டத்தகுதி, திறன்கள், பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிமுகம் ஆகியவை அடங்கும். மொத்தமாக, நியோஷ் வழங்கும் 111 திட்டங்களில், 109 திட்டங்கள் HRDF அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆகும்.

நியோஷ், மனிதவள மேம்பாட்டு நிதி நிறுவனத்தால் (HRDF) 5 நட்சத்திர விருது பெற்ற 10 பயிற்சி வழங்குநர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, அயல்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய சிக்கலை, அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு அறிமுகத் திட்டம் போன்ற கட்டாய அடிப்படை பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியை மேற்கொள்ள வைப்பதின் மூலம் சீர்படுத்தலாம். இது குறைந்தபட்சமாக கட்டுமானப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு இடர்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும். NIOSH அமைப்பு இதுவரையிலும் மலேசியா முழுதும் 583,019-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளது.

நியோஷ் மலேசியா முழுதும் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதன் 18 வட்டார அலுவலகங்கள் மற்றும் கிளைகளின் வாயிலாகப் பயிற்சி அளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. எங்களிடம் அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த பயிற்றுநர்கள் பயிற்சித் திட்டங்களை பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

எனவே, வேலையிடத்தில் பாதிக்கப்படும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களது பணியாளர்களுக்கு போதுமான பயிற்சி வழங்குவதற்கான முதலாளியின் பொறுப்பு ஆகும். எந்தவொரு துறைவிலும் வேலை வாய்ப்புகளைத் திட்டமிடும்போதும் உருவாக்கும்போதும் இது குறித்து சரியான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும்”