கோலாலம்பூர்: பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் குகைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள 272 படிகளுடன், எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவிருக்கின்றன.
தைப்பூசத்திற்குப் பிறகு இந்த ஆண்டு தொடங்கப்படும் இரண்டு திட்டங்களில் நகரும் படிக்கட்டுகளும் ஒன்று என்றும், ரிங்கிட் 35 மில்லியன் செலவில் பல்நோக்கு மண்டபம் கட்டப்படும் என்றும் பத்துமலைக் கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்குடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ”படியில் ஏற முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பிரதான மலைக் கோவிலுக்குச் செல்ல நகரும் படிக்கட்டுகள் வாய்ப்பாக அமையும் என்பதால், அரசாங்கம் இந்தத் திட்டத்தில் எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நடராஜா கூறினார்.
இதற்கிடையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, பத்துமலையில் கெசுமா மடானி (Kesuma Madani programme) என்னும் திட்டத்தை மனிதவள அமைச்சகம் நடத்தும் என்றும் அமைச்சர் சிம் கூறினார்.
தைப்பூசத்தின் போது தளவாடங்களை நிர்வகிப்பதற்கும், தற்காலிகக் கூடாரங்களை நிர்வகிப்பதற்கும், இந்திய இளைஞர்களை தொழில்நுட்ப படிப்புகளுக்கு பதிவு செய்வதற்கும் அதற்கான முகமை மையங்களை அமைப்பதற்கும், கோவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக 200 தன்னார்வலர்களை பத்துமலைக்கு தனது அமைச்சகம் அனுப்பும் என்றும் சிம் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) செயல்படுத்தும் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) இந்திய சமூகத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பதிவுசெய்வதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டிருப்பதால், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) ஒத்துழைப்புடன் இதற்கான முகமை மையம் அமைக்கப்படும் என்றும் சிம் தெரிவித்தார்.