கோலாலம்பூர்: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்தப்படும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றிய நஜிப், நம்பிக்கைக் கூட்டணி அரசு முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த மைபிரேன் (MyBrain) திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
“மைபிரேன் திட்டம் நிறுத்தப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த திட்டம், மாணவர்கள் முதுநிலை மற்றும் முனைவர் மட்டங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்கு உதவியாக இருந்தது” என அவர் கூறினார்.
இந்த திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசு மீண்டும் தொடர வேண்டும் என நஜிப் கேட்டுக் கொண்டார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, விவாத மேடை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஆயினும், பாதுகாப்பு காரணங்களை மேற்கோளிட்டு அந்நிகழ்ச்சி இறுதி நேரத்தில் நிருவாகத்தால் முடக்கப்பட்டது.