சிங்கப்பூர் – நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து இணைப்பாகப் பயன்படுத்தும் சிங்கையையும், மலேசியாவையும் இணைக்கும் இரண்டாவது கடல் பாலம் அமைந்துள்ள துவாஸ் வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் தொழிற்சாலை பேருந்தாகும்.
இதனைத் தொடர்ந்து கனரக வாகனங்களுக்கான சிறப்புப் பாதை மூடப்பட்டிருக்கிறது.
வழக்கமாக காலையில் மிக அதிகமான, நெரிசலான போக்குவரத்தைக் கொண்டிருக்கும் துவாஸ் குடிநுழைவு வளாகம் இன்றைய விபத்தைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான போக்குவரத்தை நெரிசலைச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 4.25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பொதுத் தற்காப்பு இலாகாவுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் மீண்டும் மலேசியப் பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.