கோலாலம்பூர்: சமீபத்தில் செமினி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் இனவாத விவகாரங்களைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், தாம் அவ்வாறு குறிப்பிடவில்லை என அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசு பலவீனமாக செயல்படுகிறதென்றும், அதனால் மலாய்க்காரர்களின் நலனைக் காப்பாற்ற இயலாது என்றும் அவர் அப்பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். இதற்குச் சான்றாக, மலாய்க்காரர் அல்லாதவரை தலைமை நீதிபதியாகவும், சட்டத்துறை தலைவராகவும் நம்பிக்கைக் கூட்டணி நியமித்திருப்பதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
இதே, பிரச்சாரத்தின் போது, சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்தும் , ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும், சட்டத்துறைத் தலைவரும், கைது செய்யப்பட்டவர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கில் இன்னும் தீர்வு எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு, பதிலடி கொடுத்த மஇகா கட்சித் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், “நஸ்ரி தாம் ஒரு வழக்கறிஞர் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். மரண விசாரணை நடந்துக் கொண்டிருப்பது வழக்கறிஞரான அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனை விடுத்து, வேண்டுமனே, இம்மாதிரியான இனவாதப் பேச்சுகள் மக்களிடத்தில் கலவரத்தைத் தூண்ட முற்படும் செயலாகும்.” என சாடினார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளின் செயல்பாட்டை நிறுத்தப் போராடப் போவதாகவும் நஸ்ரி அவ்வுரையில் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த முறனான செயல், தேசிய முன்னணி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.