Home இந்தியா பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்படைத் தாக்குதல் – அண்மைய நிலவரங்கள்!

பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்படைத் தாக்குதல் – அண்மைய நிலவரங்கள்!

1108
0
SHARE
Ad

புது டில்லி: பாகிஸ்தானின் காஷ்மீர் நிலப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அதிரடியாக நுழைந்த இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர்விமானங்கள், எல்லைப் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது தாக்குதல்கள் நடத்தின.

இது குறித்த அண்மைய நிலவரங்கள் பின்வருமாறு:

  • இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருடன் பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் டுவால் கலந்து கொண்டார்.
  • புலாவாமா தாக்குதலுக்குப் பதிலடியாக 12 நாட்களுக்குப் பின்னர் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
  • வரலாற்றுபூர்வத் தாக்குதலாக இன்றையத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. காரணம், 1971-ஆம் ஆண்டு வங்காள தேசப் போருக்குப் பின்னர் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி நுழைந்து இந்திய விமானப் படை தொடுத்த முதல் தாக்குதல் இதுவாகக் கருதப்படுகிறது.
  • சுமார் 21 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதல்களில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் துடைத் தொழிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 12 போர் விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.
  • இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புகளும், கண்காணிப்புகளும் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • புலாவாமா தாக்குதலை மேற்கொண்டதாக நம்பப்படும் ஜெயிஷ் பயங்கரவாதக் குழுவின் தளங்கள் இந்தத் தாக்குதலின் மூலம் அழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் பலாக்கோட், முஸாபராபாத், சக்கோத்தி ஆகிய மூன்று பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
  • தனது இலக்குகளைக் குறிபார்த்துத் தாக்குதல் நடத்தியிருப்பதோடு, எந்தவித சேதமும் இல்லாமல் இந்திய போர் விமானங்கள் திரும்பியிருப்பது இந்திய இராணுவத்தின் போர்த்திறத்தின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.

-செல்லியல் தொகுப்பு