இஸ்லாமாபாத் – இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தும் முயற்சியில் இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது என்பதையும் அந்த விமானத்தின் போர்விமானி அபிநந்தனை (படம்) சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
எனினும், அபிநந்தன் என்ற அந்த விமானியை உடனடியாகத் தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரிய இந்திய அரசாங்கம், இதுகுறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தானின் துணைத் தூதரை வரவழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
புலாவாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதக் குழு குறித்த அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக பாகிஸ்தானிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் காயமடைந்த போர் விமானி அபிநந்தனின் புகைப்படத்தை வெளியிட்டதும், காயமடைந்த அவரைப் பத்திரிக்கையாளர்களிடம் காட்டியதும் ஜெனிவா போர் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பதட்டத்தைத் தணிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.