கோலாலம்பூர்: மில்லியன் கணக்கான பணம், மைக்கா ஹொல்டிங்ஸ் தலைமை நிருவாக அதிகாரியான எஸ். வேள்பாரியின் மற்ற நிறுவனங்களுக்கு திருப்பப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
2003 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையே பணமாகவும், பிற முறைகள் வடிவிலும் வேள்பாரிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டுள்ளது.
1980-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள இந்தியர்களின் ஒட்டுமொத்தப் பணமாக 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேலாக மைக்கா ஹொல்டிங்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், தவறான நிருவாகத்தன்மையால் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. அதனால், பல இந்தியக் குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படையான நிலையைக் கருத்தில் கொண்டு தாங்கள் காவல் துறையிடம் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்ததோடு, ஊழல் தடுப்பு ஆணைத்திடம் எல்லா ஆதாரங்களையும் ஒப்படைத்துள்ளதாக சரவாக் ரிப்போர்ட் பதிவிட்டுள்ளது.