Home உலகம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை, டிரம்ப்- ஜோன் உன் பேச்சுவார்த்தை பின்னடைவு!

ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை, டிரம்ப்- ஜோன் உன் பேச்சுவார்த்தை பின்னடைவு!

723
0
SHARE
Ad

ஹனோய்: நேற்று (புதன்கிழமை) தொடங்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாவது உச்ச மாநாடு வியட்னாமில் நடைபெற்றது.

இரண்டாவது நாளான இன்று வியாழக்கிழமை, இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆயினும், அவ்வாறான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என செய்தி வெளியாகி உள்ளது. 

இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு இருவரும் வந்து இருப்பதாக கூறப்படுகிறதுஇவ்விரு தலைவர்களின் பேச்சில் இன்னும் நிச்சயமற்றத் தன்மை நிலவுவதாக கூறப்படுகிறது. சுத்தமாக, அணு ஆயுதமே இல்லாத நாடாக மாறுவதற்கு வடகொரியா இன்னும் தயக்கம் காட்டுகிறது என்பதுதான் தற்போதைக்கு வெளியான செய்தி என பிபிசி குறிப்பிட்டுள்ளது

#TamilSchoolmychoice

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்ச மாநாட்டில் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்அப்போதைய சந்திப்பின் போது, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.  

இம்முறை, அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அது தோல்வியில் முடிந்துள்ளது.

முன்னதாக, நேற்று கொரிய போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்து விட்டதா எனும் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அது குறித்து தாம் அவசரப்பட விரும்பவில்லையென்றும், பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் கூறியிருந்தார்.