சென்னை: தமிழகத்தில் வெயிலின் காட்டம் அதிகரித்து வரும் வேளையில், நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய எட்டு நகரங்களில் 100 பாகை செல்சியஸ்சுக்கும் அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
23 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மார்ச் மாதத்தில் 106 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிக வெப்பம் காரணமாக பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருவதாக கூறியுள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணி (இந்திய நேரம்) வரை பதிவான வெயில் அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 பாகை, கரூர் பரமத்தியில் 104 பாகை, பாளையங்கோட்டை, திருச்சியில் தலா 103 பாகை, சேலத்தில் 102 பாகை, தருமபுரி, வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 101 பாகை வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வானிலை மையம் கூறியது. ஆயினும், இன்று வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.