Home கலை உலகம் ஆயிரத்தில் ஒருவன்: “உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்!”- ஜி.வி.பிரகாஷ்

ஆயிரத்தில் ஒருவன்: “உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்!”- ஜி.வி.பிரகாஷ்

1867
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் எனும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்ற படம். ஆயினும், இத்திரைப்படம் வெளியான போது இம்மாதிரியான ஏக்கங்கள் இரசிகர்கள் மத்தியில் இல்லாததைக் குறிப்பிட்டு, நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ், சமீபத்தில் விகடனுக்காக வழங்கப்பட்ட பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்குனர் செல்வராகவனை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம், இரசிகர்கள், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் எனக் கேட்டு வருவதும், அது குறித்து இயக்குனர் செல்வராகவன், அதற்கான நேரம் வரும் போது இரண்டாம் பாகம் எடுக்கப்படும் எனக் கூறி வருவதும் சமூகப் பக்கங்களில் வெளிவந்து கொண்டிருந்தன.

இத்திரைப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் அருமையான இசையை வழங்கியிருப்பார். இன்றளவும், அத்திரைப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் உலகத் தரமிக்க திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும். அத்திரைப்படம் வெளியான போது, இசைக்காகப் போற்றப்படும் எனவும், திரைப்பட விழாக்களில் அதற்கான அங்கீகாரங்கள் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்த்ததாக ஜி.வி.பிரகாஷ் கூறினார். ஆயினும், அவருக்கு, ஆடுகளம் படத்திற்கு விருதுகள் கிடைத்தது எனக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தீவிரமான ஆய்வுகள் மேற்கொண்டு இசையை அமைத்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அப்படம் வெளியான போது, அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்படவில்லை. அதோடுமட்டுமில்லாமல், அந்த நாட்களில் படம் வெளியான போது, படத்திற்கு கூட்டம் வராததை அவர் சுட்டிக் காட்டினார். இதன் அடிப்படையில், படத்தை ஒரு முறை பார்க்கலாம் எனும் கருத்துகளும் அக்காலக்கட்டத்தில் இருந்ததாக ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டார்.

தற்போது, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதாகவும், அதற்கு அமோக வரவேற்பு கிடைப்பதாகவும் செய்திகள் வெளியாயின. படத்தைப் பார்த்து விட்டு வெளியேறும் இரசிகர்கள் பகிரங்கமாக இயக்குனர் செல்வராகவனிடம் மன்னிப்புக் கேட்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என இரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்து வருவதாக தங்களின் கருத்துகளை சமூகப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து, கேள்விகள் கேட்ட போது, “படம் வெளியான போது மிகுந்த நம்பிகையுடன் இருந்தோம். இப்படத்தின் இசைக்காக இரவும் பகலும் பாடுபட்டோம். பின்னணி இசை அருமையாக அமைந்திருந்தது. ஆயினும், படம் வெற்றிப்படவில்லை. தற்போது, அப்படத்தின் இசையையும், திரைக்கதையையும் பாராட்டுகிறார்கள், இது எந்த விதத்தில் நியாயம்” என ஜி.வி.பிரகாஷ் கேள்விகளை மக்களிடத்திலே திருப்பி விட்டார்.

ஒரு கலைஞனுக்கு தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைத்துவிட வேண்டும். இல்லையெனில், காலம் கடந்து அதனை பெற்றுக் கொள்வதில் அதன் சாரம் குறைந்துவிடும். ஒரு வித ஏமாற்றமே மிஞ்சி இருக்கும். ஒரு வேளை, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது, இரசிகர்கள் இதே வரவேற்பை அப்போது தந்திருந்தால், இரண்டாம் பாகத்திற்கான வேளைகள் அப்போதே தொடங்கப்பட்டிருக்கும் என தனது வருத்தத்தைப் பதிவிட்டார்.