கோலாலம்பூர்: தேசிய முன்னணி மத்தியில் ஆட்சியிலிருந்த போது எதிர் தரப்பிலிருந்து இந்தியர்களின் நலனை தற்காத்துப் பேசிய தற்கால அமைச்சர்களான, பிரதமர் துறை அமைச்சர், பொன்.வேதமூர்த்தி மற்றும் மனிதவள அமைச்சர், எம். குலசேகரன், தங்களது வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டனர் என மஇகா கட்சியின் உதவித் தலைவர் சி. சிவராஜ் தெரிவித்தார்.
அண்மையக் காலமாக, நாட்டில் 300,000 மேற்பட்ட இந்தியர்கள் அடையாள அட்டைப் பிரச்சனையை எதிர் நோக்கி உள்ளதாகவும், அவற்றை தேசிய முன்னணி அரசு கண்டுக் கொள்ளாமல் நிராகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், 3,000 சிவப்பு நிற அடையாள அட்டை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு நீல நிற அடையாள அட்டை கிடைக்கும் என்று வாக்குக் கொடுத்ததும் இவர்கள்தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது, இந்த விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பினால், இது என்ன திடீர் உணவுப் போன்றதா உடனே தீர்ப்பதற்கு என எள்ளி நகைக்கும் வண்ணமாகப் பேசியது கண்டிக்கத்தக்க செயலாகும் என சிவராஜ் கூறினார். அப்போது, 100 நாட்களில் அடையாள ஆவணப் பிரச்சனையை திர்த்து விடுவோம் என உறுதியாகக் கூறியவர்கள் , இன்று இவ்வாறான பதிலைக் கொடுப்பது வேதனையளிக்கிறது என்றார். பொன். வேதமூர்த்தியும், குலசேகரனும், தாங்கள் கொடுத்த வாக்குகளை மீறி உள்ளனர் என சிவராஜ் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இன்று அவர்கள் வசம் இருக்கையில், பின் ஏன் அவர்களால் சொன்னபடி இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என சிவராஜ் வினவினார்.